அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்! இராஜகுடும்பங்களில் இருப்பவர்கள் பெரிய,பெரிய அரசர்களானாலும் சரிதான்.எந்த நேரமும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது மிகஉண்மை.திடீரென யாராவது புகுந்து அல்லது யாராவதுடைய தூண்டுதலின் பேரில் எளிதாக ராஜகுடும்ப வாரிசுகளைப் போட்டுத் தள்ளிவிடுவதும் உண்டு.இதுதான் சோழர்கள் விசயத்திலும் நடந்தது.சுந்தர சோழ சக்கரவர்த்திக்குப் பிறகு ஆட்சிக்குவர முழுமையான அதிகாரத்துடன் திகழ்ந்தது அருண்மொழியைக் (ராஜராஜனைக்) காட்டிலும் அவனது அண்ணனான ஆதித்த கரிகாலனே.வீரத்தில் சிறந்து தில்லைச் சிற்றம்பல முகட்டை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்தர் பெயரையும், இமயத்தில் புலிக்கொடி பொறித்து வச்சிர நாட்டு மன்னனின் முத்துப்பந்தரையும்,அவந்தி மன்னனின் வாயில் தோரணமும்,மகத அரசனின் பட்டி மண்டபமும் கொண்டு வெற்றி முரசு கொட்டிய கரிகாலன் பெயரையும் சேர்த்து ஒருசேரப் பெயர் விளங்கிய ஆதித்த கரிகாலன் வீரத்தில் சற்றும் சளைத்தவனல்ல.வட தென் ஆற்காடு மாவட்டங்களில் கிடைத்த கல்வெட்டுகளிலும்,பரந்தூர்க் கல்வெட்டுகளிலும் வீரபாண்டியனின் தலைகொண்டதாகக் குறிப்பிடப்படும் இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன் என்பவன் இவனே.அண்ணனும்,தம்பியுமாக அரசாண்டார்கள் என்று கல்வெட்டுகளில் பொறிக்க முடியாத அளவில் ஆதித்தனின் மரணம் நிகழ்ந்துவிட்டது.கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் (கி.பி - 956-969) வரை பட்டத்து இளவரசனாகவே இருந்துவிட்டு நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டான் இந்த வீர இளவரசன்.அற்ப ஆயுளில் அநியாயமாகக் கொல்லப்பட்டதில் நிறைய மர்மங்கள் அடைந்துகிடந்தது.(உயர்திரு.கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் இதனை மர்மமாகவே வெளியிட்டிருப்பார்!)கிடைத்த தகவல்களை யூகங்களின் அடிப்படையிலேயே தான் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.ஆதித்த கரிகாலனைப் பற்றிய கவ்லெட்டுகள் குறைவே என்பதால் தகவல்களும் குறைவே.ஆனாலும், கிடைத்த தகவலின்படி,சுந்தரசோழனுக்குப் பிறகு அரியணை ஏறிய உத்தமசோழன்(மதுராந்தகன்) சுந்தரசோழருக்குத் தம்பிமுறை.கண்டராதித்தரின் மகனான இவன் சுந்தரசோழருக்குப் பிறகு தானே ஆட்சிக்கு வர முழு உரிமை உடையவன் என்று எண்ணினான். தந்தையைப் போல பெரிய சிவபக்தராக வருவான் என்று நினைத்து மகிழ்ந்திருந்த மதுராந்தகரின் தாய் செம்பியன் மாதேவியாருக்கே இதில் விருப்பமில்லை.பிற்காலச் சோழர்குல வரைபடம்ஆனால், சுந்தரசோழர், தான் ஆட்சியில் இருக்கும்போதே தனது மகன் ஆதித்தகரிகாலனுக்கு பட்டத்து இளவரசனாகப் பட்டம் கட்டியது "எனக்கு அடுத்த வாரிசு ஆதித்த காரிகாலன் தான்!" என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.இதனால் மனம்கொதித்த மதுராந்தகருக்கு அரண்மைனைப் பெரியவர்கள் சிலரும் சேர்ந்து தூபம் போட்டுவைக்க ஆதித்த கரிகாலனைக் கொல்வதற்கான சதியொன்று அங்கே அரங்கேறியது.இதற்குப் பெரிய இடங்களிலும் , எதிரிகளிடமும் வலுவான ஆதரவு இருந்ததால், ஆதித்த கரிகாலன் தந்திரமாகக் கொலை செய்யப்பட்டான் என்று தெரிகிறது.ஏனெனில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்த போது வம்சப் பகைவர்களான பாண்டியர்களுடன் நெருங்கிக் கைகோத்துக்கொண்டதும் நடந்தது.கொலை நடந்த பிறகு, அரண்மனை விவகாரங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன.தன்னையே வெற்றிகொள்ளப்போகும் வாரிசு என எண்ணி மகிழ்ந்திருந்த ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதில் மனமுடைந்தார் சுந்தரசோழர்.அருண்மொழிவர்மனோ இலங்கையின் வடபகுதிப் போர்களில் முக்கியப் பொறுப்பேற்றிருந்த காலமது.ஆதித்த கரிகாலன் இறந்ததும்(கி.பி.969) மனம்வெறுத்து உடலும் பலமிழந்த நிலையில் மேலும் நான்குஆண்டுகள் ஆட்சிசெய்த சுந்தரசோழ சக்கரவர்த்தி கி.பி 973-ல் காஞ்சி பொன் மாளிகையில் இறந்தார்.அவருடன் மனைவி வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினார்.சுந்தரசோழர் இறந்தபிறகு அருண்மொழி முழுத்தகுதியுடன் இருந்தபோதும் மதுராந்தகராகிய உத்தமசோழரே அரியணை ஏறினார்.உத்தம சோழனின் நாணயம்திருவாலங்காட்டு பட்டயங்கள் சொல்வது போல், ஆதித்த கரிகாலன் விண்ணுலகு காணும் ஆசையில் இறந்ததால் மக்களும் கூட அருண்மொழிவர்மனே ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்பினார்கள்.ஆனால், சத்திரிய தர்மமறிந்த அருண்மொழிவர்மன் தனது சிற்றப்பனின் அரியணை ஆசை அறிந்து, தான் அரியணையை ஏற்க மறுத்துவிட்டான் என்றும் கூறுகின்றன.மேலும் அருண்மொழியின் உடலின் சில அடையாளங்கள் கண்டு திருமாலே பூவலகை ஆளவந்ததாக நினைத்து அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, மண்ணுலகை தானே ஆண்டான் மதுராந்தகன் என்றும் கூறுகின்றன.உண்மையில்,ஆதித்த கரிகாலன் இறந்தபோதே பட்டத்து இளவரசன் இறந்ததால் நாடே குழப்பநிலையிலிருந்தது.இந்த நிலையில் தான் ஆட்சிக்கு வருவது மேலும் குழப்பங்களையும்,எதிரிகளுக்கு வாய்ப்புகளையும் தரும் என்பதால் அரியணையை அருண்மொழி மறுத்துவிட்டான். அதே நேரம்,"தனக்குப் பிறகு அருண்மொழிவர்மனும்,அவன் புதல்வர்களுமே ஆட்சிக்கு வரத் தகுதியானவர்கள்" என்று உத்திரவாதத்தைத் தன்னிடம் இருந்து குறுநிலமன்னர்களும்,வேளக்காரப்படையும் வாங்கிய பிறகே அரியணை ஏறச்சம்மதித்தார் மதுராந்தகர்.(வேளக்காரப்படை என்பது சோழ அரசனைக்காக்க ஆபத்துக்காலங்களில் உயிரை விடவும் சபதமேற்று பணிபுரியும் படை.பலமுறை அரசன் உயிர்காக்க உயிரையும் பணயம் வைத்திருக்கின்றனர்.ராஜராஜன் காலத்தில் இருந்த வேளக்காரப்படைகளின் எண்ணிக்கை 14. இவர்களுக்கு மானியம் அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டது.பாண்டியர்களின் ஆபத்துதவிப்படை போல சோழர்களுக்கு வேளக்காரப்படை இருந்தது.)இந்த வேளக்காரப்படைகளின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டுதான் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டது நடந்தது.உடையார்குடிக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றி தெளிவாக விவரிக்கின்றது."ஸ்வஸ்திஸ்ரீ கோ ராஜராஜகேசரிவர்மர்க்கு.....பாண்டியன் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்,தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும்,இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடன்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும்......"எனப் பலரைக் கைகாட்டுகின்றது.விழுப்புரத்துக்கு அருகில் எசாலம் எனும் ஊரில் எடுக்கப்பட்ட இராஜேந்திரசோழனின் செப்பேட்டிலும் சில தகவல்கள் கூறப்படுகிறது. சோழருக்குப் படியாமல் தன்னாட்சி புரிய விரும்பிய வீரபாண்டியன் தலைகொண்டு ஆதித்த கரிகாலன் அதனை மூங்கில்கம்பில் கோத்து தஞ்சை அரண்மனைவாயிலில் வைத்தான். இது பாண்டியர்களைக் கொதிப்படையச் செய்து ஆதித்தனின் உயிரை எடுப்பதற்கு மிகத் தூண்டியிருக்கலாம்.இதற்கு சோழநாட்டில் பணிபுரிந்த பாண்டிய நாட்டானாகிய "பஞ்சவன் பிரம்மாதிராஜனை” வைத்து எளிதில் ஆதித்தனுடைய கதையை முடித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.இதில் உத்தமசோழருக்கும் மறைமுகமாகப் பங்கிருந்ததாகத் தெரிவதால்(நேரிடையாகக் குறிப்பிட போதுமான ஆதாரமில்லை!)அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது உண்மை.(ஒருவேளை உத்தமசோழர் ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பார்கள்.ஆனால்,தீர்ப்பு ராஜராஜனின் 3-ஆம் ஆட்சிக்காலத்திலேயே வழங்கப்பட்டது என்று கூறுவோரும் உண்டு)எது எப்படியோ..மதுராந்தகராகிய உத்தமசோழன் எதிரிகளை மன்னித்தாலும் ராஜராஜசோழன் மன்னிப்பதாக இல்லை.தகுந்த சந்தர்ப்பம் வாய்த்த போது அவர்களைப் போட்டுப் புரட்டி எடுத்தான் என்பதும் உண்மை.
அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!சுந்தரசோழன் இறந்தபிறகு, உத்தமசோழன்(மதுராந்தகன்) பரகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தது சரியாக கி.பி 973-ல்.இதிலிருந்து சரியாகப் பனிரெண்டு ஆண்டுகள் அருண்மொழிவர்மன் பட்டத்து சோழ இளவரசனாக வலம்வந்தான்.உத்தமசோழனைப் பற்றி அத்தனை கொடுங்கோலன் என்றெல்லாம் எந்தக் கல்வெட்டுகளோ,குறிப்புகளோ குறிப்பிடவில்லை.அவனுடைய ஆட்சிக்காலம் சிறப்பாகவே இருந்தது.ஏனெனில் சுந்தரசோழனுடைய ஆட்சிக்காலத்திலேயே எதிரிகளாக அச்சுறுத்தியவர்கள் சற்றே அடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.தவிரவும் ஈழத்திலும்,பாண்டிய மண்டலத்திலும் உத்தமசோழனது நாணயங்கள் காணக்கிடைக்கின்றன.தனிப்பட்ட முறையிலும் அரசாங்க காரியங்களிலும் சிறந்தவனாகவே உத்தமசோழன் இருந்துவந்தான்.திருநாரையூர்,திருவீசையூர்,திருவாலங்காடு உள்ளிட்ட பல சிவாலயங்களுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளான்.சைவசமயத்தின் பால் அதிகமான ஈடுபாடு கொண்டவனாக இருந்தபோதிலும்,வைணவ ஆலயங்களையும் அவன் மறுக்காமல் சில விஷ்ணு ஆலயங்களுக்கும் நிவந்தங்கள் செய்துள்ளான்.இராஜராஜனும் மதுராந்தகரிடம் மிகப்பாசம் கொண்டிருந்தான்.தனது மகனான (முதலாம்) ராஜேந்திரன் பிறந்தவுடன் தன் சிற்றப்பனின் மேல் கொண்ட அன்பாலும்,குழந்தையின் மதுரமான சிரிப்பைக் கொண்டும் மதுராந்தகன் என்றே பெயரிட்டான்.உத்தமசோழன் அரிஞ்சய சோழனுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியவன்.உரியவயது இல்லை என காரணம்காட்டி பலகாலம் அரியணை மறுக்கப்பட்டான் என்று கூறுவோரும் உள்ளனர்.உத்தமசோழனுடைய ஆட்சியில் மக்கள் நன்றாகவே இருந்தார்கள் என்றாலும், சோழநாட்டின் வடக்குப்பகுதிகளிலும்,பாண்டிய நாட்டிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளை உத்தமசோழனால் அடக்க இயலவில்லை என்றே தெரிகிறது.மலைநாடும்,சில சிற்றரசுகளும்கூட போர்க்கொடியைத் தூக்கியிருந்தன.சோழநாட்டுக்கு வடக்கில் இந்நேரம் மிகப்பெரிய திருப்பம் ஒன்று நிகழ்ந்திருந்தது.காலம்காலமாகவே மிகப்பெரிய நிலபரப்பைத் தன்னகத்தே கொண்டு வலிமையுடன் விளங்கிய பேரரசு மான்யகேதா-வைத் தலைமையாகக் கொண்ட ராட்டிரகூடப் பேரரசு.கி.பி-730 - களில் (சரியாகச் சொல்வதானால் கி.பி 735-ல்) சாளுக்கியர்களை ஒழித்துவிட்டு அந்த பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிய ராட்டிரகூடத்தின் முதல்மன்னன் தந்திதுர்கனே, பிற்காலச் சோழர்களுக்குப் பெரும் தலைவலியைத் தொடங்கி வைத்தான்.பல்லவர்கள் இருந்த வரை அவர்களை ஒருவழி செய்தவர்கள்,அடுத்து சோழர்களைப் பதம்பார்க்கத் தொடங்கியிருந்தனர்.இவர்களிடமிருந்து நாட்டின் வடபகுதியைக் காப்பதற்கே பெரும்பாலான படைகளை சோழர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.ராட்டிரகூடர்களிடமிருந்து தங்களது பகுதிகளைக் காப்பதே பெரிய வேலையாக இருந்ததால் அவர்களிடமிருந்து எந்தப்பகுதிகளையும் கைப்பற்றுவதைப் பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாத நிலை.அதிலும் கண்டராதித்தர் ஆட்சியின்போது கிட்டத்தட்ட இன்றைய தஞ்சை வரை வந்து ராட்டிரகூடர்கள் ஆக்கிரமித்துக்கொண்டதும்,பின் அரும்பாடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தியதும் நடந்தது.சாளுக்கியர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தங்களது கொடியைப் பறக்கவிட்ட இந்த ராட்டிரகூடர்களின் கடைசிமன்னன் இந்திரா IV.(பார்க்க படம் - ராட்டிரகூடப் பேரரசு)வாழ்க்கை மட்டுமல்ல ..வரலாறும் வட்டம் என்பதுபோல்,கி.பி - 973-ல் தைலப்பா-II என்ற மேலைச்சாளுக்கிய மன்னன் இந்திரா-IV -ஐ வெற்றிகொண்டு ராட்டிரகூடத்தில் 240 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாளுக்கியக் கொடி ஏற்றினான்.இத்துடன் ராட்டிரகூட வம்சம் சிதறிப்போய் விட்டது.(இவ்வளவு விவரமாக இவர்களைப் பற்றிச் சொல்வதில் விசயம் இருக்கிறது.ஏனெனில்இந்த தைலப்பா-II கி.பி 997-ல் இறந்துவிட்டபோது ஆட்சிக்கு வந்தவனே சத்யாசிரயன்.தந்தையைவிட அடாவடித்தனத்தோடு சோழர்களுக்குத் தொல்லை தந்தவன்)இந்த சாளுக்கிய நாடும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.கல்யாணியைத் தலைநகராய்க்கொண்ட மேலைச்சாளுக்கியநாடு.வடபெண்ணை முதல் கிருஷ்ணா வரை கொண்ட வேங்கி தலைநகரான கீழைசாளுக்கியநாடு.சரி! ராட்டிரகூடர்களை புறந்தள்ளி நம் ராஜராஜனிடம் வருவோம்!(கி.பி 973-985 )உத்தமசோழன் 12 ஆண்டுகள் ஆட்சிசெய்து கி.பி 985-ல் மரணமடைந்தான்.மதுராந்தக கண்டராதித்தன் என்ற பெயரில் உத்தமசோழனுக்கு ஒரு மகன் இருந்தபோதிலும் கொடுத்த வாக்கின்படி அருண்மொழியே ஆட்சிக்கு வர ,இளைய மதுராந்தகன் கோவில் நிலங்களையும்,நிர்வாகங்களையும் கண்காணிக்கும் முக்கியப்பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.அடுத்து அருண்மொழி அரியணை ஏறும்முன் , சட்டெனசோழநாட்டைச் சுற்றி அப்போது இருந்த நாடுகளை ஒரு நோட்டம் விடுவோம்!(பார்க்க படம்:2)சோழநாட்டுக்குத் தெற்கே பாண்டியநாடு,அதற்கும் கீழே ஈழநாடு,மேற்குக்கரையில் மலைநாடு(சேரம்),அதை ஒட்டி கங்கபாடி,காவிரி தொடங்கும் குடகுநாடு,மைசூரை உள்ளடக்கிய தடிகைபாடி,மைசூருக்குக் கிழக்கே நுளம்பபல்லவர்கள் ஆண்ட நுளம்பபாடி(தும்கூர்,பெங்களூரு முதலிய பகுதிகள்!),வடக்கே சாளுக்கிய நாடு,கலிங்கநாடு என்ற அளவில் நாடுகளும்,அவற்றால் பகைகளும் சோழநாட்டைச் சூழ்ந்திருந்தன.இந்நிலையில்தான்,புறாவுக்காக சதைகொடுத்த சிபிச்சக்கரவர்த்தி,நீதிக்காய் மகனைத் தேர்க்காலில் கிடத்திய மனுநீதிச்சோழன்,இமயத்தில் கொடி பொறித்த கரிகாற்பெருவளத்தான் என அனைத்துப்புகழ்பெற்ற சோழச்சக்கரவர்த்திகளின் மொத்த உருவமாய்,கி.பி 985-ஆம் ஆண்டு ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம்(ஜூலை 18) அருண்மொழி வர்மன் ராஜகேசரி என்ற பட்டத்துடன் உலகப்புகழ் பெறப்போகும் இராஜராஜசோழனாக அரியணை ஏறினான்.இனி செல்லுமிடம் எங்கும்... ஜெயக்கொடிதான்!
Wednesday, July 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment