வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!தமிழகத்தை எந்தக் காலத்திலும் ஆண்ட, எந்த மன்னர்களிலும் தனியாக வைத்துப் போற்றப்பட வேண்டியவன் மாமன்னன் ராஜராஜ சோழன். வீழ்ந்து கிடந்த சோழப்பேரரசை மீட்டுப் புலிக்கொடியைப் பறக்கவிட்ட மிகப்பெரிய வேந்தன்.(மரியாதைக்காக "ர்" போட்டால் ராஜராஜர் என தள்ளிப் போவதால் "ன்" போட்டே அழைப்போம்.சோழவேந்தனும், தஞ்சை ஆவுடையாரும் பொறுத்தருள்வராக!)அவனுடைய சரித்திரத்தை உற்றுப் பார்ப்பதற்கு முன் சற்றே அந்தக் காலத்து தமிழகத்து நிலை எப்படியிருந்தது என்பதைப் புரட்டிப்பார்த்து விடுவது நலம்.தமிழகத்தைத் தொன்றுதொட்டு அல்லது பழைய நாளிலிருந்தே மூன்று வம்சங்கள் ஆண்டு வந்தன. ஆம்..நீங்கள் சொல்வது தான். அவை பாண்டிய,சோழ,சேர வம்சங்கள்.இதில் தமிழகத்தின் பூர்வீகக்குடி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது பாண்டிய வம்சத்தினரே.அதற்காக சோழரும்,சேரரும் பூர்வீகம் என்ன பாரசீகமா? இல்லை.அவர்களும் பூர்வீகத் தமிழினங்களே.ஆனால்,பாண்டியனிலிருந்து பிற்பாடு பிரிந்தவர்களான அவர்களே சேரர்,சோழர்,பாண்டியராகத் தமிழகத்தை முறையே மலைநாடு,வளநாடு,பழநாடு என ஆண்டு வந்தனர். "கிளைநாடு” பல்லவர்களைக் குறிக்கும்.அவர்கள் அடுத்து வருவார்கள்.அசோகர், சந்திரகுப்தர் போன்ற மாபெரும் ஆட்சியாளர்கள் இந்தியா முழுமையும் ஆண்டபோதும்கூட, கி.மு-க்களில் இருந்தே தமிழகம் யாருடைய ஆளுகைக்கும் உட்படாமல் தனித்தே இருந்துவந்தது.(பார்க்க படம் 1: அசோகரின் கீழ் இந்தியா)சரி! கரிகால் வளவன்(கரிகாலன் இரண்டு பொருள் : சற்றே தீப்பிடித்து கருமை படிந்த கால்கள். யானைகளுக்கு யமன் (கரி - காலன்!)) இமயத்தில் புலிக்கொடி பறக்கவிட்ட பின்னர் பலகாலம் கழித்து வடக்கிலிருந்து உள்புகுந்த கன்னட தேசம் சார்ந்த கன்னடர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர்.கிட்டத்தட்ட கி.பி 300 முதல் 600 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களும் இவர்களே!இவர்களில் குறிப்பிடத் தகுந்தவன் அல்லது குறிப்பிடக் கிடைத்தவன் அச்சுத விக்கந்தன் அல்லது அச்சுதன் என்பவன்.யாப்பெருங்கலக்காரிகையில் குறிப்பிட்டுப் பாராட்டப்பெறுபவன் இவனே.இவர்கள் போதுமான அளவு கல்வெட்டுகளை விட்டுச் செல்லவில்லை அல்லது பின்னர் வந்த மன்னர்கள் அவற்றை விட்டுவைக்கவில்லை(அழித்துவிட்டிருக்கலாம்!)இவர்களின் ஆட்சிக்காலம் பற்றிய தகவல்கள் எதுவும் பெற முடியாமையால் இது வரலாற்று ஆய்வாளர்களால் "இருண்ட காலம்" என அழைக்கப்படுகிறது என்றாலும் மூவேந்தர்களையும் அடிமைப்படுத்தியவன் சாதாரணனாக இருந்திருக்க முடியாது.மூவேந்தர்களும் சிற்றரசர் அதிகாரத்திலேயே அந்நாட்களில் அதிகாரம் செலுத்த முடிந்தது. இருப்பினும் 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர்களும்,பல்லவர்களும்(புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கோவில் இவர்கள் கைங்கரியம்)சேர்ந்து களப்பிரர்களைத் தமிழகத்திலிருந்து அகற்றினர்.இந்தக் களப்பிரர்களே பாளி மொழியும்,சமணமும் தமிழகத்தில் புகக் காரணமானவர்கள்.பின்னர் வந்த பல்லவர்களும் தங்கள் பங்குக்கு வடமொழியை வழிமொழிந்தனர்.இவர்கள் ஆட்சிக்குப் பின்னரே தமிழில் "ஜ" போன்ற எழுத்துகளின் உச்சரிப்புகளை நாம் காணலாம்..(மன்னர்களின் பெயர்களில் கூட!) என்றாலும் பல்லவர்களின் கட்டடக்கலையே பின்னாளில் பெரும் உயரத்தில் கோபுரங்கள் உயர எழுவதற்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.பாண்டியர்களுக்கும், காஞ்சியைத் தலைமையாகக் கொண்டிருந்த பல்லவர்களுக்கும் தமிழகத்தின் தலைமையைக் கைப்பற்ற போட்டி நடக்கையில்(பார்க்க படம்:2) வீழ்ந்து கிடந்த சோழரினம் மெல்லத் தலைதூக்க முடிந்தது.வீழ்வதும் மெல்ல எழுவதுமாக இருந்த அந்தப் பிற்காலச் சோழர்களின் ஆட்சிவரிசையில் தான் ஒரு புதிய நட்சத்திரம் உதயமானது.அந்நட்சத்திர மன்னனின் ஆட்சியில் நிலப்பரப்பு,அதிகாரம்,கலை,இலக்கியம்,வாணிபம்,சமயம் என அனைத்து வகையிலும் உச்சத்தைத் தொட்டு உலக அரங்கில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. அவனை வீழ்த்த யாராலும் முடியவில்லை.சென்ற இடமெங்கும் வெற்றிக்கொடி நாட்டினான்.ஆம்! அவன் தான் இராஜராஜசோழன்!
சோழனும் சரி! பாண்டியனும் சரி! சேரனும் சரி! தங்கள் கைகள் ஓங்கும்போதெல்லாம் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்களே தவிர,தமிழகத்தைத் தாண்டிச் சென்று பிறபகுதிகளைக் கைப்பற்றுவதை கற்பனையிலும் நினைக்கவில்லை.தமிழகத்தை முழுவதும் ஆளவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.மூவேந்தர்களும் இணைந்து ஒரு பேரரசை ஏற்படுத்தியிருந்தால் முழு இந்தியாவையும் கைக்கொள்ளும் மூளையும்,பலமும் நம்மவர்களிடம் நிறையவே இருந்தது.ஆனால், வலியச்சென்று தாக்குவதை அவர்கள் விரும்பவில்லை.தங்கள்,தங்கள் பகுதிகளைக் காத்துக்கொள்ளக் கட்டமைத்தவர்கள் அடுத்த நாட்டினைக் கைப்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அவர்களின் அதிகபட்ச இலக்கு முழுத்தமிழகமே!சேரன், சோழனுடனோ அல்லது சேரன்,பாண்டியனுடனோ சேர்ந்து கொண்டு மற்றவரை எதிர்ப்பதே வாடிக்கையாக இருந்தது.இதுபோன்ற நிலையில்தான் ,ஆட்சிப்பொறுப்பேற்ற ராஜராஜன் கிட்டத்தட்ட இன்றைய பீகார் வரை படையெடுத்து வெற்றி கண்டான்.அதற்கு முன்,ஆண்டு கி.பி 848. ஆட்சிக்கட்டில் ஏறினான் விஜயாலய சோழன்(பரகேசரி என்ற பட்டத்துடன்!)இதற்குப் பின் வந்தவர்கள் தங்களது பெயர்களுடன் பரகேசரி,இராஜகேசரி போன்ற பட்டங்களை சேர்த்துக் கொண்டனர்.அந்நேரம் சிற்றரசாக உறங்கிக்கிடந்தது சோழ அரசு. தஞ்சை மற்றும் அருகிலிருந்த சில வளமான பகுதிகளை பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்ட முத்தரையர்கள் ஆண்டு வந்தனர்.இந்த முத்தரையர்களை அகற்றிவிட்டு அந்தப் பகுதிகளைத் திறமையாகக் கைப்பற்றினான் விஜயாலயசோழன்(கி.பி 848-871)(பார்க்க படம்:1)பாண்டியர்களும்,பல்லவர்களும் முனைப்போடு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம்.இருவருக்கும் இடையிலான தொடர்ச்சியான போர்களினால் இரு நாடுகளிலும் குழப்பம் மிகுந்திருந்தது.நிருபதங்க பல்லவன் ஆட்சிக்குவர பாண்டியனும், அபராஜித பல்லவன் ஆட்சிக்கு வர சோழனும் உதவிபுரிய வந்தார்கள்.கங்க நாட்டு மன்னனாகிய பிரதிவீபதியும் அபராஜித பல்லவனுக்குத் துணையாக வந்தான்.இருபடைகளுக்கும் இடையே திருப்புறம்பியம் எனும் இடத்தில் போர் மூண்டது.பலநாட்கள் தொடர்ந்த போரில் (பிற்பாடு வரப்போகும் சோழசாம்ராஜ்யத்துக்கான மிக முக்கிய திருப்புறம்பியம் போர் இதுதான்!) சோழர்கள் சார்ந்த அபராஜித பல்லவன் படை வெற்றிபெற்றது.பாண்டியர்களும், நிருபதங்க பல்லவனும் தமிழகத்தின் வட பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.இந்தப் போரில் ஒரு மெய்சிலிர்க்கும் வீரச்செயலும் சொல்லப்படுவதுண்டு.அபராஜித பல்லவனுக்குத் துணைபோன சோழர்படை அடிமேல் அடிவாங்கி தோற்கும் நிலை.அங்குப் படைகளின் போரைக் காண வந்த விஜயாலயசோழன் இந்த நிலையைக் கண்டான்.இருகைகளிலும் வாளேந்தி படைவீரர்களின் தோளில் அமர்ந்து சென்று(இருகால்களும் செயல் இழந்திருந்த நிலையில்!) நாலாபக்கமும் வாளைச் சுழற்ற சிதறி வீழ்ந்தன எதிரிகளின் தலைகள்.இதைக் கண்டு வீராவேசமடைந்த சோழர்படை எதிரிப்படைகளை முன்னேறித் துவம்சம் செய்தது என்பதும் செவிவழிச் செய்திகள்.இப்போருக்குப் பின் அபராஜித பல்லவனுக்கு பல்லவநாட்டின் அரசனாக முடிசூட்டப்பட்டது.போரில் அதிகபட்ச வீரம் காட்டிய கங்க நாட்டு மன்னன் பிரதிவீபதி வீரமரணமடைந்தான்.ஆனால் இந்தப் போர்களினாலும்,பிளவுகளினாலும் பல்லவர்படை வலுவற்று இருந்தது உண்மை.அடுத்த சில ஆண்டுகளிலேயே ராஜதந்திரமாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபராஜித பல்லவனைக் கொன்று பல்லவநாட்டையும் சோழதேசத்துடன் இணைத்தான் விஜயாலயசோழனின் புதல்வனாக ஆட்சிக்குவந்த முதலாம் ஆதித்தன்(கி.பி-871-907)இப்போது தொடங்கிய இந்தப் பிற்கால சோழராட்சியில் விஜயாலய சோழனைத் தொடர்ந்து முதலாம் ஆதித்த கரிகாலனும் அவனைத் தொடர்ந்து பராந்தக சோழனும்(கி.பி 907-950) ஆட்சிக்கட்டில் ஏறினார்கள்.பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் ஆட்சியை மேலும் விரிவாக்கும் எண்ணத்துடன் பாண்டியமன்னன் ராஜசிம்மனுடன் போரிட, பாண்டியனுக்கு ஆதரவாக இலங்கையின் ஐந்தாம் காசியபன் படைகொண்டு வர, இருபடைகளையும் ஏககாலத்தில் வெற்றிகண்டான் பராந்தக சோழன்.ஆனாலும், தனது மணிமுடியை இலங்கைமன்னன் காசியபன் வசம் பாண்டியமன்னன் ஒப்படைத்ததால் அதனைக் கவர்வதற்காக இப்போதிலிருந்து தொடங்கியதுதான் இலங்கையுடனான சோழர்களின் போர்.பராந்தக சோழனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்த கண்டராதித்தர்(கி.பி 949-958) ஆட்சியின் மீது பிடிப்பு அற்றுப்போய், தனது தம்பி அரிஞ்சய சோழனுக்கு அடுத்து பட்டத்தை சூட்டினான்.கண்டராதித்த சோழன் போர்களை விரும்பாமல், இறைவழிபாட்டில் மனதைச் செலுத்த சோழர்பகுதிகள் ஒவ்வொன்றாக எதிரிகள் வசமாகத் தொடங்கியது.அரிஞ்சய சோழன்(கி.பி 956-957) எதிரிகள் வசமிருந்த பகுதிகளை மீட்க முயன்று அதில் தோல்வியே கண்டான்.அடுத்து இவனுடைய மகன் சுந்தரசோழன் (கி.பி 956-973) ராஜகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தான்.கண்டராதித்தரின் புதல்வன் மதுராந்தகன் சிறுவயது என்பதால், தானே ஆட்சிப்பொறுப்பேற்றான் இந்த அரிஞ்சய மைந்தன்.சுந்தரசோழனின் ஆட்சியில் விரிவுபெறத் தொடங்கியது சோழநாடு.சுந்தரசோழனின் கீழ் சோழநாடு(படம்:2)இவனுக்கு மூன்று குழந்தைகள்.ஆதித்த கரிகாலன்,குந்தவை,அருண்மொழிவர்மன்.சுந்தரசோழனின் ஆட்சியில் சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்படை வீரத்துடன் போரிட்டு வீரபாண்டியனுடைய தலை கொய்யப்பட்டது.அடுத்து வடக்கே காஞ்சிப் பகுதிகளில் தொடர்ந்து தொல்லை தந்து கொண்டிருந்த ராட்டிரகூடர்களை அடக்கக் கிளம்பினான் (இரண்டாம்)ஆதித்த கரிகாலன்.தீராப்பகையுடன் இருந்த இலங்கையை வெற்றிகொள்வது சுந்தரசோழனின் வெகுவான ஆவலாயிருந்தது.ஆதித்தன் வடபகுதிகளில் போர்களில் இருந்ததால், இலங்கைகுப் படையெடுத்துச் செல்ல தந்தையால் அனுப்பப்பட்டவன் தான் 19 வயதே நிரம்பிய அருண்மொழிவர்மன் எனும் ராஜராஜசோழன்!
Wednesday, July 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment