Wednesday, July 27, 2011

Thanjur Peruvudaiyaar Temple - Thanjavur

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
தஞ்சை வெ.கோபாலன்
25 Sep 2010 அச்சிட
தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தார்கள். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுத்து வழிபட்டான். அவனது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றினர். இங்குதான் மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் ஓர் கற்கோயில் எடுத்துப்பித்து அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பெருமை பெற்றான்.
அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூர் மற்றும் இங்கு வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலைப் பற்றி, வரலாறு, கல்வெட்டு ஆகியவைகளின் அடிப்படையில் ‘தஞ்சாவூர்’ எனும் ஓர் ஒப்பற்ற நூலையும் ‘இராஜராஜேச்சரம்’ எனும் மற்றொரு நூலையும் எழுதி வரலாற்றில் இடம்பெற்று விட்டவர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்.
இவருடைய மேற்படி நூல்களில் இருக்கும் செய்திகளைத் தவிர வேறு எந்தப் புதிய தகவலையும் மற்றவர் யாரும் கொடுத்துவிட முடியாது. எனவே, அவருடைய நூல்களில் கண்ட அருமையான செய்திகளை இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன். இது முழுவதும் அவருடைய கண்டுபிடிப்புகளே; இதில் எதையும் நான் புதிதாக எழுதிவிடவில்லை. இங்கு கொடுக்கப்படும் செய்திகள் அனைத்தும் அவரது நூல்களில் காணப்படும் கருத்துக்களேயன்றி, சொந்தச் சரக்கு எதுவுமில்லை. தமிழகமும், தமிழர்களும் இத்தகைய வரலாற்றுச் செய்திகளுக்காக யாரையாவது பாராட்டி பெருமை செய்யவேண்டுமென்றால், அதற்கு இவரைத் தவிர வேறு யாரும் தகுதியாக இருக்கமுடியாது. ஆகவே முதலில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு கட்டுரையைத் தொடங்குகிறேன்.
‘இராஜராஜேச்சரம்’ - பெயர்க்காரணம்.
“கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.”
“பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.”
சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.
இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.
“இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.”
“மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.”
‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.
நுழைவுக் கோபுரம் - கேரளாந்தகன் திருவாயில்
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி - பொது சகாப்தத்திற்குப் பின், CE)
இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.
ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.
திருக்கோயிலின் அமைப்பு
ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.
இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.
அற்புதமான துவாரபாலகர்கள்
பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.
அம்மன் ஆலயம்
நத்தி மண்டபத்திற்கு வடபுறம் அமைந்திருப்பது அம்மன் ஆலயம். இங்கு மேற்புறச் சுவரில் காணப்படும் ஓர் கல்வெட்டின்படி இது பாண்டிய மன்னனின் கல்வெட்டு என்பது தெரிகிறது. முதலில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில்தான் படிகள் இருந்தனவாம். பிறகு நாயக்க மன்னர்கள் காலத்தில் முன்மண்டபம் வழியாகச் செல்லும் பாதை அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரமிச்சி நாயக்கர் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் ஆகியவற்றை எழுப்பித்ததோடு ஆலயத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியருக்கு ஓர் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயிலையும் எழுப்பியிருக்கின்றனர். நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தபோதும் தஞ்சையில் நாயக்க வம்சத்தை ஸ்தாபித்த சேவப்ப நாயக்கன் மட்டும் சைவனாக இருந்தான் எனவும், இவனே சுப்பிரமணியர் ஆலயத்தை எழுப்பியிருக்க வேண்டும் என்றும் நம்புகின்றனர்.
நந்தி மண்டபமும் அங்கே அமைந்திருக்கும் மாபெரும் நந்தியும் நாயக்க மன்னர்களின் கொடை. இந்த ரிஷப மண்டபம் 5அடி உயரமுடைய மேடைமீது 16 தூண்கள் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. மேற்கூரை ஒரே சமதளமாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் அமைந்துள்ளது. இந்த நந்தி மண்டபத்தையும், சந்நிதிக்குள் நுழையும் முன்மண்டபத்தையும் இணைக்க நாயக்க மன்னர்கள் முயன்றிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எழுப்பிய ஒரு தூண் இப்போதும் துவஜஸ்தம்பம் அருகில் இருக்கிறது.
விநாயகர் ஆலயம்
திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயம் மராட்டிய மன்னன் சரபோஜியால் கட்டப்பட்டது. மன்னன் ராஜராஜன் கட்டிய விநாயகர் கோயில் திருச்சுற்று மாளிகையில் இருக்கிறது. இது மராட்டிய கட்டுமானத்தோடு விளங்குகிறது. இதன் பின்புறம் 108 சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. இவற்றை சரபோஜி மன்னன் வீரசிங்கம்பேட்டை எனும் ஊரிலிருந்து கொண்டுவந்து 1801இல் பிரதிஷ்டை செய்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இச்சிவலிங்கங்கள் வீரசிங்கம்பேட்டையில் கி.பி. 750இல் இரண்டாம் நந்திவர்மன் எழுப்பிய ஆயிரத்தளியில் இருந்தவை, பின்னாளில் அந்நகரம் அழியவே அந்த இடிபாடுகளிலிருந்து லிங்கங்களைக் கொணர்ந்து சரபோஜி இங்கே பிரதிஷ்டை செய்தான் என்கின்றனர்.
தஞ்சை பெருவுடையார் திருவுருவம்
தஞ்சைக் கோயிலின் கட்டட அமைப்பு பெரும் கோயிலாகத் தொன்றுகிறதோ அதுபோலவே அதிலுள்ள சிற்பங்களுமும் பெரியதாகவும் எழில்மிகுந்தனவாகவும் காட்சியளிக்கின்றன. மற்ற சிவாலயங்களைப் பார்க்கும்போது இங்குள்ள சிற்பங்கள் தனித்துவமிக்கதாக இருக்கின்றன. இங்குதான் மிகப்பெரிய சிவலிங்கம் மூலவராகக் காட்சியளிக்கிறார். பெருவுடையார் எனப்பெயர் பெற்று விளங்கும் இந்த லிங்கத் திருமேனி முழுவதும் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது. மூன்று பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இதில் நடுவில் லிங்கபாணம் நீண்ட தூண்வடிவில் இருக்கிறது. அதன் மேல்பாகம் உருளை வடிவில் இருக்கிறது. இதன் பீடப்பகுதி சதுர வடிவில் இருக்கிறது. நடுப்பகுதியில் எண்பட்டை அமைப்பில் இருக்கிறது. இது தரையிலிருந்து 12 அடி 10 அங்குல உயரத்தில் இருந்தாலும் இதன் அடிப்பகுதி தரைக்குள் 3 அல்லது 4 அடியாவது புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ இது 16அடி உயரமுடைய ஒரே கல்லிலால் ஆன லிங்க வடிவமாகும்.
இராஜராஜேச்சரத்தில் மனித உருவச் சிலைகள்
இராஜராஜேச்சரத்து கல்வெட்டில் மன்னனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன் தந்தை இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழருக்கும் தன் தாயார் வானமன் மாதேவியார்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்தமை பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த சுந்தர சோழனை பொன்மாளிகை துஞ்சின தேவர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர் நந்திபுரத்து அரண்மனையில் பொன்மாளிகையில் துஞ்சினவர் என்பதால் இந்தப் பெயர் பெற்றார். இராஜராஜன் அவன் தமக்கையார் ஆகியோர் தங்கள் தந்தைக்கும் தாய்க்கும் படிமங்கள் அமைத்து வழிபட்டமை தெரிகிறது.
இவை தவிர மன்னன் இராஜராஜனுக்கும் அவனது தேவி லோகமாதேவி ஆகியோர்க்கு பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன் எனும் தென்னவன் மூவேந்த வேளான் படிமங்கள் எடுத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
அர்த்த மண்டப தென்வாயிலில் மன்னன் இராஜராஜனும் அவன் மகன் ராஜேந்திரனும் சிலைவடிவில் காட்சியளிக்கிறார்கள். அவை அளவில் மிகச் சிறியதாகவும் கடவுளை வணங்கும் கோலத்தில் அவை வடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
இராஜராஜேச்சரத்தில் கலைப்பணிகள்
தஞ்சை இராஜராஜேச்சரத்தில் இயல் இசை நாடகம் எனும் தமிழனின் முத்தமிழ் பிரிவுகள் சிறப்பாக வளர்ந்திருக்கின்றன. இவை இங்குள்ள கல்வெட்டுகள், சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறியலாம். பின்னர் வந்த விஜயநகரப் பேரரசுகள், மராத்தியர்கள் ஆகியோர் காலத்திலும் இவை இங்கு சிறப்பாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.
இராஜராஜன் தேவார ஏடுகளைச் சிதம்பரம் ஆலயத்திலிருந்து மீட்டான் எனவும், அதனை நம்பியாண்டார் நம்பி முறைப்படுத்திக் கொடுத்தார் எனவும் வரலாறு சொல்லுகிறது. எனினும் இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இதற்காக பணியாற்றியோர் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இங்கு திருமுறை விண்ணப்பம் பாடுவோர், உடுக்கை வாசிப்போர், மத்தளம் வாசிப்போர் ஆகியோர் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியக் கலை மிக மேன்மையாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தி. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளும் ஏழு நட்டுவனார்களும், உடன்பாடுவோர் நான்கு பேரும், மெராவியம் எனும் இசைக்கருவி இசைப்பார் இருவர், கானம் பாடுவோர் இருவர், வங்கியம் இசைப்பார் மூவர், பாடவியம் எனும் இசைக்கருவியை இசைப்போர் நால்வர், உடுக்கை வாசிப்போர் இருவர், வீணை வாசிப்போர் இருவர் ஆரியம் பாடுவார் மூவர் (அதாவது வேதம் ஓதுதல்) தமிழ் பாடுவோர் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுவோர் மூவர், பக்கவாத்தியம் வாசிபோர் ஐவர் இப்படி பற்பலர் இங்கு பணிபுரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. திருப்பதியம் விண்ணப்பம் செய்வோருக்கு பிடாரர்கள் என்று பெயர்.
இப்படி ஆலயத்தில் பாடுவதற்கும், உடன் வாத்தியம் வாசிப்பதற்கும், நடனமிடுதற்கும் இந்தக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் இவைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டியமாடும் நங்கையர் நானூற்றி ஏழு பேருக்கும் இரண்டு தளிச்சேரிகள் (குடியிருப்புப் பகுதிகள்) அமைத்து அவரவர்க்குத் தனித்தனியாக வீடுகள் கொடுத்து அவற்றுக்கு இலக்கங்களும் கொடுத்த செய்தி குறித்து வைக்கப் பட்டிருக்கிறது. இந்த நங்கையர் அனைவர் பெயர்களும் அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர், முன்பு பணிபுரிந்த இடம் ஆகிய செய்திகளும் கொடுக்கப் பட்டிருப்பதிலிருந்து, அரசன் இவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தான் என்பதை அறியலாம்.
ஆடற்கலைக்கு அரசன் அளித்த முக்கியத்துவம், அவன் வடித்துள்ள கரணச் சிற்பங்களிலிருந்து அறியலாம். ஆடற்கலைக்கு மூல முதல்வன் சிவபெருமான் நடராஜ மூர்த்தி எனும் ஆடவல்லான் ஆகும். “ஒரு மொழிக்கு எழுத்தும், அவ்வெழுத்துக்களின் கோர்வையான சொற்களும்தான் அடிப்படை. அதுபோல பரதக் கலைக்கு அடிப்படையாகத் திகழ்வது நூற்று எட்டு கரணங்கள். சிவபெருமான் முதன்முதலில் கரணங்களைப் போதித்தாராம். தஞ்சை இராஜராஜேச்சரத்தைப் போலவே பரதக்கலை கரணங்கள் தில்லை, திருக்குடந்தை, திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் உள்ளன. சில இடங்களில் பெண்கள் கரணங்கள் ஆடுவதாகவும், குடந்தையில் முருகக் கடவுள் ஆடுவதாகவும் சிற்பங்கள் உண்டு. இங்கு தஞ்சையில் பெருவுடையார் மூலத்தானத்துக்கு மேலே உள்ள பிரகார சுவர்களில் இந்த 108 கரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. 104 முழுமை அடைந்து விட்ட நிலையில் என்ன காரணத்தாலோ கடைசி நான்கு நிறைவு பெறவில்லை.
ஆலய ஊழியர்களுக்கு நிவந்தங்களும் ஊதியங்களும்
மாமன்னன் இராஜராஜன் இவ்வாலயத்தின் செயல்பாட்டுக்காக பல நிவந்தங்களை இட்டு வைத்தான். எண்ணற்ற பொன்னணிகள், பொன்னால் ஆன பாத்திரங்கள், பொன் திருமேனிகள், வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளித் திருமேனிகள், செப்புத் திருமேனிகள் என்று இவன் வழங்கியுள்ள நிவந்தங்கள் எண்ணற்றவை. சோழமண்டலத்தில் மட்டுமல்ல இவன் வெற்றி கொண்ட பிற பிரதேசங்களிலிருந்தும் பல ஊர்களை இந்தக் கோயிலுக்கு அளித்திருக்கிறான். ஊர்நத்தம் திருக்கோயில்கள், குளங்கள் என்று இவன் செய்வித்த அறங்கள் அளப்பரியன. நிலங்களுக்கு வரி நிர்ணயம் செய்து ஒவ்வோராண்டும் அளக்கப்பட வேண்டிய நெல்லும், அந்த நெல்லை அளக்க ‘ஆடவல்லான்’ எனும் பெயரில் ஓர் மரக்காலும் நியமித்தான்.
ஒரு ஊரின் மொத்த நிலப்பரப்பு, அதில் வரி விலக்கு பெற்ற விளை நிலங்கள், கோயில்களுக்கு தேவதானமாகத் தரப்பட்ட நிலப்பரப்பு, அதற்கு நிச்சயிக்கப்பட்ட வரி கோயிலுக்கு செலுத்துதல், எவ்வளவு நெல் அளக்க வேண்டும் என்பதுபோன்ற பல விவரங்களை கல்வெட்டில் எழுதி வைத்தான். துல்லியமான நில அளவினைக் குறித்து கோயிலுக்கு வரவேண்டிய நெல்லின் அளவு போன்றவற்றையும் மிகச் சரியாகக் குறித்து வைத்தான். இவன் பல ஊர்களிலும், பல நிலப்பரப்புகளிலிருந்தும் கோயிலுக்கு வரவேண்டிய மொத்த நெல்லின் அளவையும் குறித்து வைத்திருக்கிறான். அதன்படி இக்கோயிலுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்துப் பதினையாயிரம் கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2000 காசுகளும் நிரந்தர வருமானம் கிடைக்க ஆவன செய்தான்.
பெருவுடையார் ஆலயத்துக்கு பணிக்கப்பட்ட தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தலைக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலம் மான்யமாக அளிக்கப்பட்டிருக்கிறது. வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல்லை இவர்கள் பெற்றார்கள். இந்தப் பெண்கள் இறந்தாலோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலோ உரிமையுள்ள இவர்களது குடும்பத்தார் நிலத்தின் பலன்களைப் பெறமுடியும்.
பரிசாரகர் பண்டாரி கணக்கர்
இந்த ஆலய ஊழியத்துக்காக பரிசாரகர், பண்டாரி, கணக்கர் போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி இங்கு 4 பண்டாரிகளும், 170 மாணிகளும், 6 கணக்கர்களும், 12 கீழ்கணக்கர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். சிலர் நிரந்தர ஊழியர்கள். மற்றையோர் பல்வேறு ஊர்களிலிருந்து சுழற்சி முறையில் கோயில் பணியில் இருப்பார்கள். கோயில் பண்டாரம் (stores) கருவறைப்பணி, கணக்குப்பணி இவற்றில் இருப்போர் கோயிலுக்குரிய பெரும் சொத்துக்களை பராமரிப்பவர்கள் என்பதால் இவர்களுக்குச் சொந்தமாக நிலம், பொருள், உறவினர் ஆகியவை இருத்தல் அவசியம். கருவூலத்தில் பொன், நவமணிகள், நெல் போன்ற விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பதால் இங்கு பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை இதனால் அறிய முடிகிறது.
காவலர்கள்
பெரிய கோயில் பண்டாரங்களில் விலை உயர்ந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததால், இவை அனைத்தும் சோழ மண்டல மக்களுக்குச் சொந்தம் இதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்பதால் மன்னன் இவைகளுக்குத் தகுந்த காவலர்களை நியமித்தான். சோழ மண்டலம் முழுவதிலும் 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் நியமிக்கப் பெற்றனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
ஆலயத்திற்குக் கொடைகள்
இராஜராஜேச்சரத்தில் திருவிளக்குகள் ஏற்றுவதற்காக நெய் முதலானவை கிடைக்க ஆயிரக்கணக்கான ஆடுகள், பசுக்கள், எருமைகள் ஆகியன கொடுத்திருந்தான். ஒரு விளக்குக்கு நாள் ஒன்றுக்கு ஓர் உழக்கு நெய் அளிக்க வேண்டும். இதற்காக பணமாகவோ நிலமாகவோ அளிக்காமல் ஊருக்கும் பயன்படும் விதத்தில் கால்நடைகளையே அளித்திருந்தான். மன்னன் மட்டுமா? அவன் அமைச்சர்கள், அரண்மனைப் பெண்டிர், உயர் அதிகாரிகள் அனைவருமே இந்த கொடையில் பங்கு பெற்று கொடைகள் அளித்து மகிழ்ந்தனர். காசு ஒன்றுக்கு 2 ஆடும், காசு இரண்டுக்கு 1 பசுவும், காசு மூன்றுக்கு ஒரு எருமையும் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.
பல்வேறு இடங்களில் வாழ்ந்தவர்கள் இந்தக் கொடைகளை வாங்கிக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய் அளிக்க ஒப்புக்கொண்டனர். அவன் எவ்வளவு கால்நடைகள் வைத்திருந்தாலும் அவன் கோயிலுக்குத் தரவேண்டியது ஒரு உழக்கு நெய்தான், மீதம் அவன் சொந்தத்துக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான அவசியப் பண்டங்களின் விலைக் கட்டுப்பாடு
இன்றைய தேதியில் நாமெல்லாம் விலைவாசி உயர்வு பற்றி பேசிப்பேசி பலன் எதுவுமின்றி தவித்து வருகிறோமல்லவா? ஆனால் அன்று மாமன்னன் ராஜராஜன் விலைவாசி உயராமல் இருக்கக் கடைப்பிடித்த ஒரு சிறிய வழக்கத்தைப் பார்க்கலாம்.
ஆலயத்தில் விநாயகருக்கு நாள்தோறும் வாழைப்பழம் நிவேதனம் செய்ய அறக்கட்டளை அமைத்திருந்தான். அப்படி விநாயகருக்கு தினந்தோறும் 150 வாழைப்பழம் வழங்குவதற்கு 360 காசுகளை முதலாகப் போட்டு ஆலயத்தின் பண்டாரத்தில் (Treasury) வைத்திருந்தான். இது என்ன வேடிக்கை? 300 காசுகள் முதல் போட்டு தினந்தோறும் 150 வாழைப்பழமா? ஆம்! ஒரு நாள் நிவேதனத்துக்கு 150 பழங்கள் தேவை என்றால் ஆண்டொன்றுக்கு (360×150=54000) பழங்கள். அன்றை வாழைப்பழ விலை ஒரு காசுக்கு 1200 பழங்கள். ஒரு வருடத்திற்கு வேண்டிய தொகை 45 காசுகள். இந்தத் தொகையை ஆண்டு வட்டியாகப் பெறும் மூலதனம் 360 காசுகள் என்பதிலிருந்து வட்டி விகிதம் 12.5% என்று தெரிகிறது. உள்ளூர் வணிகர்கள் வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். அந்த வட்டியைக் கணக்கிட்டே அரசன் 360 காசுகளை மூலதனமாகப் போட்டு தினந்தோறும் தேவையான வாழைப்பழங்களை நிவேதனத்துக்குப் பெற்றான் என்பதிலிருந்து, மன்னனுடைய பொருளாதார அறிவையும், விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் வழிகளையும் தெரிந்திருந்தான் என்பது புரிகிறது. மன்னனுடைய இந்த ஏற்பாட்டின்படி மூலதனம் அப்படியே இருக்கும், ஆண்டு வட்டி வருமானத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக் கொள்வார்கள். அப்படி வட்டிக்கு பண்டாரத்திலிருந்து பணம் வாங்கிக்கொள்ள வர்த்தகர்கள் முன்வந்தார்கள்.
வாழைப்பழ எடுத்துக்காட்டினைப் பார்த்தோம். அதுபோலவே செண்பக மொட்டு, இலாமிச்சம், பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், புளி, தயிர், கொள்ளு, உப்பு, வாழையிலை, வெற்றிலை, பாக்கு, சிதாரி, கற்பூரம், விறகு, பழைய அரிசி ஆகிய பொருட்களின் விலைகளும் கால்நடைகளின் விலைகளும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன என்பதை தஞ்சை கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.
கல்வெட்டில் செதுக்கப்பட்ட மன்னன் அளித்த நிவந்தங்கள்
தஞ்சை இராஜராஜேச்சரத்தில் உள்ள இராஜராஜ சோழனின் முதல் கல்வெட்டு கூறும் செய்தி இது:- “நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.
மன்னன் ராஜராஜன் இத்திருக்கோயிலுக்கு அளித்த ஆயிரக்கணக்கான பொருட்கள் வரிசையில் முதலில் குறிப்பிடப் பெற்றவை 829 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற ஸ்ரீபலி எழுந்தருளும் தேவர் பொன் திருமேனியும் 995 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற பொன்னாலான பத்மத்துடன் கூடிய ஸ்ரீபலிபீடம் என்பதையும் அறியமுடிகிறது. இங்கு “ஸ்ரீபலி” என்று குறிப்பிடப்படும் சொல்லுக்கு “அர்ப்பணித்தல்” என்று பொருள். மாமன்னன் காலத்தில் இந்தக் கோயிலில் தினமும் வாத்திய இசையோடு கூடிய நாட்டியம் எனும் ஆடற்கலையும் ஈசனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது எனும் செய்தி இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட வாத்தியக் கருவிகள்
ஸ்ரீராஜராஜீச்சரத்தில் பல வாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. குழல், உடுக்கை, இலைத்தாளம், கொட்டி மத்தளம், கின்னரம், பறை, மெராவியம், வங்கியம், பாடவியம், வீணை, முத்திரைச்சங்கு, சகடை ஆகியவை இவை. இவற்றில் மெராவியம் என்பது நாகசுரம் போன்ற ஒரு குழல் இசைக்கருவியாக இருக்கலாம் என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. பாடவியம் என்பதோர் மற்றொரு இசைக்கருவி. இது பற்றி ராஜராஜன் கல்வெட்டுகளில் காணப்படும் செய்தி.
“திருவிடைமருதுடையார் கோயிலில் பாடவியத்திற்கு முன்பு நிவந்தமில்லாமையில் அத்தேவர்க்கு பாடவியம் வாசிக்க நித்த நெல்லு இருதூணியாக அரையன் திருவிடைமருதூருடையானான மும்முடிச்சோழ நிருத்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்தோம்…”
“திருமுகப்படியே திருவிடைமருதூருடையார் கோயிலில் பாடவியக் காணியுடையார் ஸ்ரீராஜராஜதேவர் பெருந்தனத்து காந்தப்பரில் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிச்சோழ நித்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்த இப்பாடவியம் வாசிப்பானுக்கு நித்தம் நெல்லு இருதூணியாக ஒராட்டைக்கு நெல்லு இருநூற்று நாற்பதின் கலம்…” என்று குறிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீவிமானம் பொன்வேய்ந்தது
இராஜராஜன் திருவாயிலிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டின்படி இராஜராஜேச்சரத்துக்கு மன்னன் விமானம் முழுவதும் பொன் வேய்ந்தான் என்று தெரிகிறது. இதுதவிர மன்னனின் தமக்கையார் குந்தவை நாச்சியார் (அக்கன் என்று குறிப்பிடப்படுபவர்) பட்டத்தரசி ஓலோகமகாதேவியார், மற்றொரு மனைவியான சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகியோரும் கொடைகள் அளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மன்னனுடைய தேவிகளாவர்.
நாயக்க மன்னர்கள் ஆட்சியில் பெரிய கோயில்
தஞ்சையை செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாதநாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய அரசர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை ஆண்டுகொண்டிருந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணிகளும், ஆலயங்கள் பராமரிப்பும் மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. ஆலயங்களில் இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கவின் கலைகள் வளர்ச்சி பெற்றன. குறிப்பாக ஆந்திரப் பகுதியிலிருந்து இங்கு வந்த புதிய கலையான பாகவத மேளா எனும் இசைநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றன. சோழ மன்னர்கள் விட்டுச்சென்ற இசைப் பாரம்பரியத்தோடு, வளமும் புதுமையுமான நாயக்க மன்னர்களின் இசை மரபுகளும் சேர்ந்து கொண்டன. தஞ்சை கலைகளின் இருப்பிடமாக மாறியது. இவர்கள் காலத்தில்தான் ஆலயத்திலிருந்த மகாநந்தி புதிதாக அமைக்கப்பட்டது, சோழர்களின் நந்தி இப்போது வராகி அம்மன் கோயிலுக்கருகில் இருக்கிறது. பிரகாரத்தில் சுப்பிரமணிய சுவாமிக்குப் புதிய கோயில் கட்டப்பட்டது.
ஆலயத்தில் மூர்த்திஅம்மன் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம் ஆகியவை நிருவப்பட்டன. செவ்வப்ப நாயக்கரும் அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இந்நகரின் பொற்கொல்லர்களுக்கு சில உரிமைகளை வழங்கினர்.
மராட்டியர் ஆட்சி காலத்தில்
கி.பி. 1675 தொடங்கி 1850 வரையில் தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஏகோஜி, சஹாஜி, முதலாம் சரபோஜி, துளஜேந்திரராஜா, பாவாசாகிப், சுஜான்பாயி, பிரதாபசிம்ம ராஜா, இரண்டாம் துளஜா, அமரசிம்மன், இரண்டாம் சரபோஜி, சிவாஜி, காமாட்சிபாயி ஆகியோர் ஆண்டு வந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத்தின் பல பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. கலைகள் ஏற்றம் பெற்றன. சிற்ப, சித்திர, நாட்டிய, இசை போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன.
இரண்டாம் சரபோஜி காலத்தில் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. சரபோஜியின் போஸ்லே வம்ச வரலாறு கல்வெட்டில் வெட்டப்பட்டது. 1729ல் குடமுழுக்கு நடைபெற்றது. விமான உச்சியில் அப்போது ஒரு புதிய கலசம் வைக்கப்பட்டது. அதில் ‘ராசா சரபோசி மகாராசா உபையம்’ என்று எழுதப்பட்டிருந்தது. கடைசி மராட்டிய மன்னனான சிவாஜி காலத்தில் 7-9-1843ல் மற்றொரு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. 1798 முதல் 1832 வரை தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி பல அறப்பணிகள் செய்தான். இவன் காலத்தில் பிரகாரத்துக்குக் கல் தளம் அமைக்கப்பட்டது. வடகிழக்கிலுள்ள மண்டூக தீர்த்தக் கிணறு புதுப்பிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் ஒரு கணபதி ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும்
பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வாலயம் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. யுத்த காலத்தில் சிப்பாய்களும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானப்படை தாக்குதலை சமாளிக்க நிறுவப்பட்ட ஒரு படையும் இவ்வாலயத்தினுள் முகாமிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில்கூட பல ஆண்டுகள் இவ்வாலயத்துக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தன. இது தொல்பொருள் இலாகா வசம் இருப்பதால் அவர்கள் இதனை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துபோகவும் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு மக்கள் சிறிது சிறிதாக இவ்வாலயத்தின் பெருமை கருதி வரத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒரு முக்கிய இடமாகக் குறிக்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில் இவ்வாலய அர்ச்சகர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட திணறியது நிர்வாகம்.
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இங்கு சுற்றுலா கூட்டமும், உள்ளூர் கூட்டமும் அலைமோதுகிறது. தென்னக பண்பாட்டு மையம் தங்கள் கலை நிகழ்ச்சிகளையும், நாட்டியம், இசை போன்றவற்றை இவ்வாலயத்தின் நந்தி மண்டபம் அருகே நடத்துகின்றனர். ஆலயம் புத்துயிர்பெற்று பழம்பெருமையை மீண்டும் பெறுவதற்கான வெற்றிப் பயணத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பெருமையை ஒரு முறையாவது நேரில் வந்து பார்ப்பவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும். காலங்கள் மாறினாலும், மன்னன் வாழ்ந்த அரண்மனை, நகரம் இவை அழிந்து போனாலும், அவன் எழுப்பிய இந்த வானுயர இராஜராஜேச்சரம் காலம் காலத்துக்கும் நிலைத்து நின்று, மன்னன் ராஜராஜனின் புகழை உயர்த்திப் பிடிக்கும்.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..பெரிய கோயில் அளவுகோல்...எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.சாரங்களின் அமைப்புகருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின.அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.சோழர் நகரம்!தெருக்கள்(தஞ்சாவூர்ப் புறம்படி)காந்தர்வத் தெரு, மடைப்பள்ளித் தெரு, வில்லிகள் தெரு, ஆணைகடுவார் தெரு, ஆனை ஆட்கள் தெரு, பன்மையார் தெரு, சாலியத் தெரு.பெருந்தெருக்கள்மும்முடிச்சோழப் பெருந்தெரு, நித்தவினோதப் பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, செயங்கொண்ட சோழப் பெருந்தெரு, இராசவித்யாதரப் பெருந்தெரு, சூரசிகாமணிப் பெருந்தெரு.சோழ மன்னர்கள் பெயரில் ஆறுகள்முடி கொண்ட சோழப் பேராறு, தண் பொருத்தமான முடி கொண்ட சோழப் பேராறு, சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு, அகளங்கப் பேராறு, மதுராந்தக வடவாறு, வீரசோழ வடவாறு, வீரராசேந்திர சோழ வடவாறு, விக்கிரமனாறு, கரிகாலச் சோழப் பேராறு (கொள்ளிடம்), வீரசோழனாறு.

Raja Raja Cholan - Part3

அரங்கேறியது ஒரு இராஜகொலை -ஆதித்த கரிகாலன் மரணம்! இராஜகுடும்பங்களில் இருப்பவர்கள் பெரிய,பெரிய அரசர்களானாலும் சரிதான்.எந்த நேரமும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது மிகஉண்மை.திடீரென யாராவது புகுந்து அல்லது யாராவதுடைய தூண்டுதலின் பேரில் எளிதாக ராஜகுடும்ப வாரிசுகளைப் போட்டுத் தள்ளிவிடுவதும் உண்டு.இதுதான் சோழர்கள் விசயத்திலும் நடந்தது.சுந்தர சோழ சக்கரவர்த்திக்குப் பிறகு ஆட்சிக்குவர முழுமையான அதிகாரத்துடன் திகழ்ந்தது அருண்மொழியைக் (ராஜராஜனைக்) காட்டிலும் அவனது அண்ணனான ஆதித்த கரிகாலனே.வீரத்தில் சிறந்து தில்லைச் சிற்றம்பல முகட்டை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்தர் பெயரையும், இமயத்தில் புலிக்கொடி பொறித்து வச்சிர நாட்டு மன்னனின் முத்துப்பந்தரையும்,அவந்தி மன்னனின் வாயில் தோரணமும்,மகத அரசனின் பட்டி மண்டபமும் கொண்டு வெற்றி முரசு கொட்டிய கரிகாலன் பெயரையும் சேர்த்து ஒருசேரப் பெயர் விளங்கிய ஆதித்த கரிகாலன் வீரத்தில் சற்றும் சளைத்தவனல்ல.வட தென் ஆற்காடு மாவட்டங்களில் கிடைத்த கல்வெட்டுகளிலும்,பரந்தூர்க் கல்வெட்டுகளிலும் வீரபாண்டியனின் தலைகொண்டதாகக் குறிப்பிடப்படும் இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன் என்பவன் இவனே.அண்ணனும்,தம்பியுமாக அரசாண்டார்கள் என்று கல்வெட்டுகளில் பொறிக்க முடியாத அளவில் ஆதித்தனின் மரணம் நிகழ்ந்துவிட்டது.கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் (கி.பி - 956-969) வரை பட்டத்து இளவரசனாகவே இருந்துவிட்டு நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டான் இந்த வீர இளவரசன்.அற்ப ஆயுளில் அநியாயமாகக் கொல்லப்பட்டதில் நிறைய மர்மங்கள் அடைந்துகிடந்தது.(உயர்திரு.கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் இதனை மர்மமாகவே வெளியிட்டிருப்பார்!)கிடைத்த தகவல்களை யூகங்களின் அடிப்படையிலேயே தான் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.ஆதித்த கரிகாலனைப் பற்றிய கவ்லெட்டுகள் குறைவே என்பதால் தகவல்களும் குறைவே.ஆனாலும், கிடைத்த தகவலின்படி,சுந்தரசோழனுக்குப் பிறகு அரியணை ஏறிய உத்தமசோழன்(மதுராந்தகன்) சுந்தரசோழருக்குத் தம்பிமுறை.கண்டராதித்தரின் மகனான இவன் சுந்தரசோழருக்குப் பிறகு தானே ஆட்சிக்கு வர முழு உரிமை உடையவன் என்று எண்ணினான். தந்தையைப் போல பெரிய சிவபக்தராக வருவான் என்று நினைத்து மகிழ்ந்திருந்த மதுராந்தகரின் தாய் செம்பியன் மாதேவியாருக்கே இதில் விருப்பமில்லை.பிற்காலச் சோழர்குல வரைபடம்ஆனால், சுந்தரசோழர், தான் ஆட்சியில் இருக்கும்போதே தனது மகன் ஆதித்தகரிகாலனுக்கு பட்டத்து இளவரசனாகப் பட்டம் கட்டியது "எனக்கு அடுத்த வாரிசு ஆதித்த காரிகாலன் தான்!" என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.இதனால் மனம்கொதித்த மதுராந்தகருக்கு அரண்மைனைப் பெரியவர்கள் சிலரும் சேர்ந்து தூபம் போட்டுவைக்க ஆதித்த கரிகாலனைக் கொல்வதற்கான சதியொன்று அங்கே அரங்கேறியது.இதற்குப் பெரிய இடங்களிலும் , எதிரிகளிடமும் வலுவான ஆதரவு இருந்ததால், ஆதித்த கரிகாலன் தந்திரமாகக் கொலை செய்யப்பட்டான் என்று தெரிகிறது.ஏனெனில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்த போது வம்சப் பகைவர்களான பாண்டியர்களுடன் நெருங்கிக் கைகோத்துக்கொண்டதும் நடந்தது.கொலை நடந்த பிறகு, அரண்மனை விவகாரங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன.தன்னையே வெற்றிகொள்ளப்போகும் வாரிசு என எண்ணி மகிழ்ந்திருந்த ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதில் மனமுடைந்தார் சுந்தரசோழர்.அருண்மொழிவர்மனோ இலங்கையின் வடபகுதிப் போர்களில் முக்கியப் பொறுப்பேற்றிருந்த காலமது.ஆதித்த கரிகாலன் இறந்ததும்(கி.பி.969) மனம்வெறுத்து உடலும் பலமிழந்த நிலையில் மேலும் நான்குஆண்டுகள் ஆட்சிசெய்த சுந்தரசோழ சக்கரவர்த்தி கி.பி 973-ல் காஞ்சி பொன் மாளிகையில் இறந்தார்.அவருடன் மனைவி வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினார்.சுந்தரசோழர் இறந்தபிறகு அருண்மொழி முழுத்தகுதியுடன் இருந்தபோதும் மதுராந்தகராகிய உத்தமசோழரே அரியணை ஏறினார்.உத்தம சோழனின் நாணயம்திருவாலங்காட்டு பட்டயங்கள் சொல்வது போல், ஆதித்த கரிகாலன் விண்ணுலகு காணும் ஆசையில் இறந்ததால் மக்களும் கூட அருண்மொழிவர்மனே ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்பினார்கள்.ஆனால், சத்திரிய தர்மமறிந்த அருண்மொழிவர்மன் தனது சிற்றப்பனின் அரியணை ஆசை அறிந்து, தான் அரியணையை ஏற்க மறுத்துவிட்டான் என்றும் கூறுகின்றன.மேலும் அருண்மொழியின் உடலின் சில அடையாளங்கள் கண்டு திருமாலே பூவலகை ஆளவந்ததாக நினைத்து அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, மண்ணுலகை தானே ஆண்டான் மதுராந்தகன் என்றும் கூறுகின்றன.உண்மையில்,ஆதித்த கரிகாலன் இறந்தபோதே பட்டத்து இளவரசன் இறந்ததால் நாடே குழப்பநிலையிலிருந்தது.இந்த நிலையில் தான் ஆட்சிக்கு வருவது மேலும் குழப்பங்களையும்,எதிரிகளுக்கு வாய்ப்புகளையும் தரும் என்பதால் அரியணையை அருண்மொழி மறுத்துவிட்டான். அதே நேரம்,"தனக்குப் பிறகு அருண்மொழிவர்மனும்,அவன் புதல்வர்களுமே ஆட்சிக்கு வரத் தகுதியானவர்கள்" என்று உத்திரவாதத்தைத் தன்னிடம் இருந்து குறுநிலமன்னர்களும்,வேளக்காரப்படையும் வாங்கிய பிறகே அரியணை ஏறச்சம்மதித்தார் மதுராந்தகர்.(வேளக்காரப்படை என்பது சோழ அரசனைக்காக்க ஆபத்துக்காலங்களில் உயிரை விடவும் சபதமேற்று பணிபுரியும் படை.பலமுறை அரசன் உயிர்காக்க உயிரையும் பணயம் வைத்திருக்கின்றனர்.ராஜராஜன் காலத்தில் இருந்த வேளக்காரப்படைகளின் எண்ணிக்கை 14. இவர்களுக்கு மானியம் அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டது.பாண்டியர்களின் ஆபத்துதவிப்படை போல சோழர்களுக்கு வேளக்காரப்படை இருந்தது.)இந்த வேளக்காரப்படைகளின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டுதான் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டது நடந்தது.உடையார்குடிக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றி தெளிவாக விவரிக்கின்றது."ஸ்வஸ்திஸ்ரீ கோ ராஜராஜகேசரிவர்மர்க்கு.....பாண்டியன் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்,தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும்,இவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடன்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும்......"எனப் பலரைக் கைகாட்டுகின்றது.விழுப்புரத்துக்கு அருகில் எசாலம் எனும் ஊரில் எடுக்கப்பட்ட இராஜேந்திரசோழனின் செப்பேட்டிலும் சில தகவல்கள் கூறப்படுகிறது. சோழருக்குப் படியாமல் தன்னாட்சி புரிய விரும்பிய வீரபாண்டியன் தலைகொண்டு ஆதித்த கரிகாலன் அதனை மூங்கில்கம்பில் கோத்து தஞ்சை அரண்மனைவாயிலில் வைத்தான். இது பாண்டியர்களைக் கொதிப்படையச் செய்து ஆதித்தனின் உயிரை எடுப்பதற்கு மிகத் தூண்டியிருக்கலாம்.இதற்கு சோழநாட்டில் பணிபுரிந்த பாண்டிய நாட்டானாகிய "பஞ்சவன் பிரம்மாதிராஜனை” வைத்து எளிதில் ஆதித்தனுடைய கதையை முடித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.இதில் உத்தமசோழருக்கும் மறைமுகமாகப் பங்கிருந்ததாகத் தெரிவதால்(நேரிடையாகக் குறிப்பிட போதுமான ஆதாரமில்லை!)அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது உண்மை.(ஒருவேளை உத்தமசோழர் ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பார்கள்.ஆனால்,தீர்ப்பு ராஜராஜனின் 3-ஆம் ஆட்சிக்காலத்திலேயே வழங்கப்பட்டது என்று கூறுவோரும் உண்டு)எது எப்படியோ..மதுராந்தகராகிய உத்தமசோழன் எதிரிகளை மன்னித்தாலும் ராஜராஜசோழன் மன்னிப்பதாக இல்லை.தகுந்த சந்தர்ப்பம் வாய்த்த போது அவர்களைப் போட்டுப் புரட்டி எடுத்தான் என்பதும் உண்மை.

அரியணை ஏறினான் இராஜராஜசோழன்!சுந்தரசோழன் இறந்தபிறகு, உத்தமசோழன்(மதுராந்தகன்) பரகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தது சரியாக கி.பி 973-ல்.இதிலிருந்து சரியாகப் பனிரெண்டு ஆண்டுகள் அருண்மொழிவர்மன் பட்டத்து சோழ இளவரசனாக வலம்வந்தான்.உத்தமசோழனைப் பற்றி அத்தனை கொடுங்கோலன் என்றெல்லாம் எந்தக் கல்வெட்டுகளோ,குறிப்புகளோ குறிப்பிடவில்லை.அவனுடைய ஆட்சிக்காலம் சிறப்பாகவே இருந்தது.ஏனெனில் சுந்தரசோழனுடைய ஆட்சிக்காலத்திலேயே எதிரிகளாக அச்சுறுத்தியவர்கள் சற்றே அடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.தவிரவும் ஈழத்திலும்,பாண்டிய மண்டலத்திலும் உத்தமசோழனது நாணயங்கள் காணக்கிடைக்கின்றன.தனிப்பட்ட முறையிலும் அரசாங்க காரியங்களிலும் சிறந்தவனாகவே உத்தமசோழன் இருந்துவந்தான்.திருநாரையூர்,திருவீசையூர்,திருவாலங்காடு உள்ளிட்ட பல சிவாலயங்களுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளான்.சைவசமயத்தின் பால் அதிகமான ஈடுபாடு கொண்டவனாக இருந்தபோதிலும்,வைணவ ஆலயங்களையும் அவன் மறுக்காமல் சில விஷ்ணு ஆலயங்களுக்கும் நிவந்தங்கள் செய்துள்ளான்.இராஜராஜனும் மதுராந்தகரிடம் மிகப்பாசம் கொண்டிருந்தான்.தனது மகனான (முதலாம்) ராஜேந்திரன் பிறந்தவுடன் தன் சிற்றப்பனின் மேல் கொண்ட அன்பாலும்,குழந்தையின் மதுரமான சிரிப்பைக் கொண்டும் மதுராந்தகன் என்றே பெயரிட்டான்.உத்தமசோழன் அரிஞ்சய சோழனுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியவன்.உரியவயது இல்லை என காரணம்காட்டி பலகாலம் அரியணை மறுக்கப்பட்டான் என்று கூறுவோரும் உள்ளனர்.உத்தமசோழனுடைய ஆட்சியில் மக்கள் நன்றாகவே இருந்தார்கள் என்றாலும், சோழநாட்டின் வடக்குப்பகுதிகளிலும்,பாண்டிய நாட்டிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளை உத்தமசோழனால் அடக்க இயலவில்லை என்றே தெரிகிறது.மலைநாடும்,சில சிற்றரசுகளும்கூட போர்க்கொடியைத் தூக்கியிருந்தன.சோழநாட்டுக்கு வடக்கில் இந்நேரம் மிகப்பெரிய திருப்பம் ஒன்று நிகழ்ந்திருந்தது.காலம்காலமாகவே மிகப்பெரிய நிலபரப்பைத் தன்னகத்தே கொண்டு வலிமையுடன் விளங்கிய பேரரசு மான்யகேதா-வைத் தலைமையாகக் கொண்ட ராட்டிரகூடப் பேரரசு.கி.பி-730 - களில் (சரியாகச் சொல்வதானால் கி.பி 735-ல்) சாளுக்கியர்களை ஒழித்துவிட்டு அந்த பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிய ராட்டிரகூடத்தின் முதல்மன்னன் தந்திதுர்கனே, பிற்காலச் சோழர்களுக்குப் பெரும் தலைவலியைத் தொடங்கி வைத்தான்.பல்லவர்கள் இருந்த வரை அவர்களை ஒருவழி செய்தவர்கள்,அடுத்து சோழர்களைப் பதம்பார்க்கத் தொடங்கியிருந்தனர்.இவர்களிடமிருந்து நாட்டின் வடபகுதியைக் காப்பதற்கே பெரும்பாலான படைகளை சோழர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.ராட்டிரகூடர்களிடமிருந்து தங்களது பகுதிகளைக் காப்பதே பெரிய வேலையாக இருந்ததால் அவர்களிடமிருந்து எந்தப்பகுதிகளையும் கைப்பற்றுவதைப் பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாத நிலை.அதிலும் கண்டராதித்தர் ஆட்சியின்போது கிட்டத்தட்ட இன்றைய தஞ்சை வரை வந்து ராட்டிரகூடர்கள் ஆக்கிரமித்துக்கொண்டதும்,பின் அரும்பாடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தியதும் நடந்தது.சாளுக்கியர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தங்களது கொடியைப் பறக்கவிட்ட இந்த ராட்டிரகூடர்களின் கடைசிமன்னன் இந்திரா IV.(பார்க்க படம் - ராட்டிரகூடப் பேரரசு)வாழ்க்கை மட்டுமல்ல ..வரலாறும் வட்டம் என்பதுபோல்,கி.பி - 973-ல் தைலப்பா-II என்ற மேலைச்சாளுக்கிய மன்னன் இந்திரா-IV -ஐ வெற்றிகொண்டு ராட்டிரகூடத்தில் 240 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாளுக்கியக் கொடி ஏற்றினான்.இத்துடன் ராட்டிரகூட வம்சம் சிதறிப்போய் விட்டது.(இவ்வளவு விவரமாக இவர்களைப் பற்றிச் சொல்வதில் விசயம் இருக்கிறது.ஏனெனில்இந்த தைலப்பா-II கி.பி 997-ல் இறந்துவிட்டபோது ஆட்சிக்கு வந்தவனே சத்யாசிரயன்.தந்தையைவிட அடாவடித்தனத்தோடு சோழர்களுக்குத் தொல்லை தந்தவன்)இந்த சாளுக்கிய நாடும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.கல்யாணியைத் தலைநகராய்க்கொண்ட மேலைச்சாளுக்கியநாடு.வடபெண்ணை முதல் கிருஷ்ணா வரை கொண்ட வேங்கி தலைநகரான கீழைசாளுக்கியநாடு.சரி! ராட்டிரகூடர்களை புறந்தள்ளி நம் ராஜராஜனிடம் வருவோம்!(கி.பி 973-985 )உத்தமசோழன் 12 ஆண்டுகள் ஆட்சிசெய்து கி.பி 985-ல் மரணமடைந்தான்.மதுராந்தக கண்டராதித்தன் என்ற பெயரில் உத்தமசோழனுக்கு ஒரு மகன் இருந்தபோதிலும் கொடுத்த வாக்கின்படி அருண்மொழியே ஆட்சிக்கு வர ,இளைய மதுராந்தகன் கோவில் நிலங்களையும்,நிர்வாகங்களையும் கண்காணிக்கும் முக்கியப்பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.அடுத்து அருண்மொழி அரியணை ஏறும்முன் , சட்டெனசோழநாட்டைச் சுற்றி அப்போது இருந்த நாடுகளை ஒரு நோட்டம் விடுவோம்!(பார்க்க படம்:2)சோழநாட்டுக்குத் தெற்கே பாண்டியநாடு,அதற்கும் கீழே ஈழநாடு,மேற்குக்கரையில் மலைநாடு(சேரம்),அதை ஒட்டி கங்கபாடி,காவிரி தொடங்கும் குடகுநாடு,மைசூரை உள்ளடக்கிய தடிகைபாடி,மைசூருக்குக் கிழக்கே நுளம்பபல்லவர்கள் ஆண்ட நுளம்பபாடி(தும்கூர்,பெங்களூரு முதலிய பகுதிகள்!),வடக்கே சாளுக்கிய நாடு,கலிங்கநாடு என்ற அளவில் நாடுகளும்,அவற்றால் பகைகளும் சோழநாட்டைச் சூழ்ந்திருந்தன.இந்நிலையில்தான்,புறாவுக்காக சதைகொடுத்த சிபிச்சக்கரவர்த்தி,நீதிக்காய் மகனைத் தேர்க்காலில் கிடத்திய மனுநீதிச்சோழன்,இமயத்தில் கொடி பொறித்த கரிகாற்பெருவளத்தான் என அனைத்துப்புகழ்பெற்ற சோழச்சக்கரவர்த்திகளின் மொத்த உருவமாய்,கி.பி 985-ஆம் ஆண்டு ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம்(ஜூலை 18) அருண்மொழி வர்மன் ராஜகேசரி என்ற பட்டத்துடன் உலகப்புகழ் பெறப்போகும் இராஜராஜசோழனாக அரியணை ஏறினான்.இனி செல்லுமிடம் எங்கும்... ஜெயக்கொடிதான்!

Raja Raja Cholan - Part 2

வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும்!தமிழகத்தை எந்தக் காலத்திலும் ஆண்ட, எந்த மன்னர்களிலும் தனியாக வைத்துப் போற்றப்பட வேண்டியவன் மாமன்னன் ராஜராஜ சோழன். வீழ்ந்து கிடந்த சோழப்பேரரசை மீட்டுப் புலிக்கொடியைப் பறக்கவிட்ட மிகப்பெரிய வேந்தன்.(மரியாதைக்காக "ர்" போட்டால் ராஜராஜர் என தள்ளிப் போவதால் "ன்" போட்டே அழைப்போம்.சோழவேந்தனும், தஞ்சை ஆவுடையாரும் பொறுத்தருள்வராக!)அவனுடைய சரித்திரத்தை உற்றுப் பார்ப்பதற்கு முன் சற்றே அந்தக் காலத்து தமிழகத்து நிலை எப்படியிருந்தது என்பதைப் புரட்டிப்பார்த்து விடுவது நலம்.தமிழகத்தைத் தொன்றுதொட்டு அல்லது பழைய நாளிலிருந்தே மூன்று வம்சங்கள் ஆண்டு வந்தன. ஆம்..நீங்கள் சொல்வது தான். அவை பாண்டிய,சோழ,சேர வம்சங்கள்.இதில் தமிழகத்தின் பூர்வீகக்குடி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது பாண்டிய வம்சத்தினரே.அதற்காக சோழரும்,சேரரும் பூர்வீகம் என்ன பாரசீகமா? இல்லை.அவர்களும் பூர்வீகத் தமிழினங்களே.ஆனால்,பாண்டியனிலிருந்து பிற்பாடு பிரிந்தவர்களான அவர்களே சேரர்,சோழர்,பாண்டியராகத் தமிழகத்தை முறையே மலைநாடு,வளநாடு,பழநாடு என ஆண்டு வந்தனர். "கிளைநாடு” பல்லவர்களைக் குறிக்கும்.அவர்கள் அடுத்து வருவார்கள்.அசோகர், சந்திரகுப்தர் போன்ற மாபெரும் ஆட்சியாளர்கள் இந்தியா முழுமையும் ஆண்டபோதும்கூட, கி.மு-க்களில் இருந்தே தமிழகம் யாருடைய ஆளுகைக்கும் உட்படாமல் தனித்தே இருந்துவந்தது.(பார்க்க படம் 1: அசோகரின் கீழ் இந்தியா)சரி! கரிகால் வளவன்(கரிகாலன் இரண்டு பொருள் : சற்றே தீப்பிடித்து கருமை படிந்த கால்கள். யானைகளுக்கு யமன் (கரி - காலன்!)) இமயத்தில் புலிக்கொடி பறக்கவிட்ட பின்னர் பலகாலம் கழித்து வடக்கிலிருந்து உள்புகுந்த கன்னட தேசம் சார்ந்த கன்னடர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினர்.கிட்டத்தட்ட கி.பி 300 முதல் 600 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களும் இவர்களே!இவர்களில் குறிப்பிடத் தகுந்தவன் அல்லது குறிப்பிடக் கிடைத்தவன் அச்சுத விக்கந்தன் அல்லது அச்சுதன் என்பவன்.யாப்பெருங்கலக்காரிகையில் குறிப்பிட்டுப் பாராட்டப்பெறுபவன் இவனே.இவர்கள் போதுமான அளவு கல்வெட்டுகளை விட்டுச் செல்லவில்லை அல்லது பின்னர் வந்த மன்னர்கள் அவற்றை விட்டுவைக்கவில்லை(அழித்துவிட்டிருக்கலாம்!)இவர்களின் ஆட்சிக்காலம் பற்றிய தகவல்கள் எதுவும் பெற முடியாமையால் இது வரலாற்று ஆய்வாளர்களால் "இருண்ட காலம்" என அழைக்கப்படுகிறது என்றாலும் மூவேந்தர்களையும் அடிமைப்படுத்தியவன் சாதாரணனாக இருந்திருக்க முடியாது.மூவேந்தர்களும் சிற்றரசர் அதிகாரத்திலேயே அந்நாட்களில் அதிகாரம் செலுத்த முடிந்தது. இருப்பினும் 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர்களும்,பல்லவர்களும்(புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கோவில் இவர்கள் கைங்கரியம்)சேர்ந்து களப்பிரர்களைத் தமிழகத்திலிருந்து அகற்றினர்.இந்தக் களப்பிரர்களே பாளி மொழியும்,சமணமும் தமிழகத்தில் புகக் காரணமானவர்கள்.பின்னர் வந்த பல்லவர்களும் தங்கள் பங்குக்கு வடமொழியை வழிமொழிந்தனர்.இவர்கள் ஆட்சிக்குப் பின்னரே தமிழில் "ஜ" போன்ற எழுத்துகளின் உச்சரிப்புகளை நாம் காணலாம்..(மன்னர்களின் பெயர்களில் கூட!) என்றாலும் பல்லவர்களின் கட்டடக்கலையே பின்னாளில் பெரும் உயரத்தில் கோபுரங்கள் உயர எழுவதற்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.பாண்டியர்களுக்கும், காஞ்சியைத் தலைமையாகக் கொண்டிருந்த பல்லவர்களுக்கும் தமிழகத்தின் தலைமையைக் கைப்பற்ற போட்டி நடக்கையில்(பார்க்க படம்:2) வீழ்ந்து கிடந்த சோழரினம் மெல்லத் தலைதூக்க முடிந்தது.வீழ்வதும் மெல்ல எழுவதுமாக இருந்த அந்தப் பிற்காலச் சோழர்களின் ஆட்சிவரிசையில் தான் ஒரு புதிய நட்சத்திரம் உதயமானது.அந்நட்சத்திர மன்னனின் ஆட்சியில் நிலப்பரப்பு,அதிகாரம்,கலை,இலக்கியம்,வாணிபம்,சமயம் என அனைத்து வகையிலும் உச்சத்தைத் தொட்டு உலக அரங்கில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. அவனை வீழ்த்த யாராலும் முடியவில்லை.சென்ற இடமெங்கும் வெற்றிக்கொடி நாட்டினான்.ஆம்! அவன் தான் இராஜராஜசோழன்!


சோழனும் சரி! பாண்டியனும் சரி! சேரனும் சரி! தங்கள் கைகள் ஓங்கும்போதெல்லாம் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்களே தவிர,தமிழகத்தைத் தாண்டிச் சென்று பிறபகுதிகளைக் கைப்பற்றுவதை கற்பனையிலும் நினைக்கவில்லை.தமிழகத்தை முழுவதும் ஆளவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.மூவேந்தர்களும் இணைந்து ஒரு பேரரசை ஏற்படுத்தியிருந்தால் முழு இந்தியாவையும் கைக்கொள்ளும் மூளையும்,பலமும் நம்மவர்களிடம் நிறையவே இருந்தது.ஆனால், வலியச்சென்று தாக்குவதை அவர்கள் விரும்பவில்லை.தங்கள்,தங்கள் பகுதிகளைக் காத்துக்கொள்ளக் கட்டமைத்தவர்கள் அடுத்த நாட்டினைக் கைப்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.அவர்களின் அதிகபட்ச இலக்கு முழுத்தமிழகமே!சேரன், சோழனுடனோ அல்லது சேரன்,பாண்டியனுடனோ சேர்ந்து கொண்டு மற்றவரை எதிர்ப்பதே வாடிக்கையாக இருந்தது.இதுபோன்ற நிலையில்தான் ,ஆட்சிப்பொறுப்பேற்ற ராஜராஜன் கிட்டத்தட்ட இன்றைய பீகார் வரை படையெடுத்து வெற்றி கண்டான்.அதற்கு முன்,ஆண்டு கி.பி 848. ஆட்சிக்கட்டில் ஏறினான் விஜயாலய சோழன்(பரகேசரி என்ற பட்டத்துடன்!)இதற்குப் பின் வந்தவர்கள் தங்களது பெயர்களுடன் பரகேசரி,இராஜகேசரி போன்ற பட்டங்களை சேர்த்துக் கொண்டனர்.அந்நேரம் சிற்றரசாக உறங்கிக்கிடந்தது சோழ அரசு. தஞ்சை மற்றும் அருகிலிருந்த சில வளமான பகுதிகளை பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்ட முத்தரையர்கள் ஆண்டு வந்தனர்.இந்த முத்தரையர்களை அகற்றிவிட்டு அந்தப் பகுதிகளைத் திறமையாகக் கைப்பற்றினான் விஜயாலயசோழன்(கி.பி 848-871)(பார்க்க படம்:1)பாண்டியர்களும்,பல்லவர்களும் முனைப்போடு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம்.இருவருக்கும் இடையிலான தொடர்ச்சியான போர்களினால் இரு நாடுகளிலும் குழப்பம் மிகுந்திருந்தது.நிருபதங்க பல்லவன் ஆட்சிக்குவர பாண்டியனும், அபராஜித பல்லவன் ஆட்சிக்கு வர சோழனும் உதவிபுரிய வந்தார்கள்.கங்க நாட்டு மன்னனாகிய பிரதிவீபதியும் அபராஜித பல்லவனுக்குத் துணையாக வந்தான்.இருபடைகளுக்கும் இடையே திருப்புறம்பியம் எனும் இடத்தில் போர் மூண்டது.பலநாட்கள் தொடர்ந்த போரில் (பிற்பாடு வரப்போகும் சோழசாம்ராஜ்யத்துக்கான மிக முக்கிய திருப்புறம்பியம் போர் இதுதான்!) சோழர்கள் சார்ந்த அபராஜித பல்லவன் படை வெற்றிபெற்றது.பாண்டியர்களும், நிருபதங்க பல்லவனும் தமிழகத்தின் வட பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.இந்தப் போரில் ஒரு மெய்சிலிர்க்கும் வீரச்செயலும் சொல்லப்படுவதுண்டு.அபராஜித பல்லவனுக்குத் துணைபோன சோழர்படை அடிமேல் அடிவாங்கி தோற்கும் நிலை.அங்குப் படைகளின் போரைக் காண வந்த விஜயாலயசோழன் இந்த நிலையைக் கண்டான்.இருகைகளிலும் வாளேந்தி படைவீரர்களின் தோளில் அமர்ந்து சென்று(இருகால்களும் செயல் இழந்திருந்த நிலையில்!) நாலாபக்கமும் வாளைச் சுழற்ற சிதறி வீழ்ந்தன எதிரிகளின் தலைகள்.இதைக் கண்டு வீராவேசமடைந்த சோழர்படை எதிரிப்படைகளை முன்னேறித் துவம்சம் செய்தது என்பதும் செவிவழிச் செய்திகள்.இப்போருக்குப் பின் அபராஜித பல்லவனுக்கு பல்லவநாட்டின் அரசனாக முடிசூட்டப்பட்டது.போரில் அதிகபட்ச வீரம் காட்டிய கங்க நாட்டு மன்னன் பிரதிவீபதி வீரமரணமடைந்தான்.ஆனால் இந்தப் போர்களினாலும்,பிளவுகளினாலும் பல்லவர்படை வலுவற்று இருந்தது உண்மை.அடுத்த சில ஆண்டுகளிலேயே ராஜதந்திரமாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபராஜித பல்லவனைக் கொன்று பல்லவநாட்டையும் சோழதேசத்துடன் இணைத்தான் விஜயாலயசோழனின் புதல்வனாக ஆட்சிக்குவந்த முதலாம் ஆதித்தன்(கி.பி-871-907)இப்போது தொடங்கிய இந்தப் பிற்கால சோழராட்சியில் விஜயாலய சோழனைத் தொடர்ந்து முதலாம் ஆதித்த கரிகாலனும் அவனைத் தொடர்ந்து பராந்தக சோழனும்(கி.பி 907-950) ஆட்சிக்கட்டில் ஏறினார்கள்.பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் ஆட்சியை மேலும் விரிவாக்கும் எண்ணத்துடன் பாண்டியமன்னன் ராஜசிம்மனுடன் போரிட, பாண்டியனுக்கு ஆதரவாக இலங்கையின் ஐந்தாம் காசியபன் படைகொண்டு வர, இருபடைகளையும் ஏககாலத்தில் வெற்றிகண்டான் பராந்தக சோழன்.ஆனாலும், தனது மணிமுடியை இலங்கைமன்னன் காசியபன் வசம் பாண்டியமன்னன் ஒப்படைத்ததால் அதனைக் கவர்வதற்காக இப்போதிலிருந்து தொடங்கியதுதான் இலங்கையுடனான சோழர்களின் போர்.பராந்தக சோழனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்த கண்டராதித்தர்(கி.பி 949-958) ஆட்சியின் மீது பிடிப்பு அற்றுப்போய், தனது தம்பி அரிஞ்சய சோழனுக்கு அடுத்து பட்டத்தை சூட்டினான்.கண்டராதித்த சோழன் போர்களை விரும்பாமல், இறைவழிபாட்டில் மனதைச் செலுத்த சோழர்பகுதிகள் ஒவ்வொன்றாக எதிரிகள் வசமாகத் தொடங்கியது.அரிஞ்சய சோழன்(கி.பி 956-957) எதிரிகள் வசமிருந்த பகுதிகளை மீட்க முயன்று அதில் தோல்வியே கண்டான்.அடுத்து இவனுடைய மகன் சுந்தரசோழன் (கி.பி 956-973) ராஜகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சிக்கு வந்தான்.கண்டராதித்தரின் புதல்வன் மதுராந்தகன் சிறுவயது என்பதால், தானே ஆட்சிப்பொறுப்பேற்றான் இந்த அரிஞ்சய மைந்தன்.சுந்தரசோழனின் ஆட்சியில் விரிவுபெறத் தொடங்கியது சோழநாடு.சுந்தரசோழனின் கீழ் சோழநாடு(படம்:2)இவனுக்கு மூன்று குழந்தைகள்.ஆதித்த கரிகாலன்,குந்தவை,அருண்மொழிவர்மன்.சுந்தரசோழனின் ஆட்சியில் சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்படை வீரத்துடன் போரிட்டு வீரபாண்டியனுடைய தலை கொய்யப்பட்டது.அடுத்து வடக்கே காஞ்சிப் பகுதிகளில் தொடர்ந்து தொல்லை தந்து கொண்டிருந்த ராட்டிரகூடர்களை அடக்கக் கிளம்பினான் (இரண்டாம்)ஆதித்த கரிகாலன்.தீராப்பகையுடன் இருந்த இலங்கையை வெற்றிகொள்வது சுந்தரசோழனின் வெகுவான ஆவலாயிருந்தது.ஆதித்தன் வடபகுதிகளில் போர்களில் இருந்ததால், இலங்கைகுப் படையெடுத்துச் செல்ல தந்தையால் அனுப்பப்பட்டவன் தான் 19 வயதே நிரம்பிய அருண்மொழிவர்மன் எனும் ராஜராஜசோழன்!

ராஜா ராஜா சோழன் - 1

ராஜ ராஜ சோழன்

இந்தியர்கள் குப்தர்களையும், விஜயநகர அரசர்களைப் பற்றிக் கற்குமளவுக்கு ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ கற்பதில்லை. இந்தியாவின் பெருமையாக ஈரானின் கட்டட காலையில் உருவான தாஜ்மகாலை கூறிக்கொள்ளும் நாம் இந்தியாவிலே உருவான தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.ராஜ ராஜ சோழனை பற்றி கேட்ட நாள் முதல் அவனை பற்றி ஆராய வேண்டும் என்ற சிந்தை இருந்தது.ஆதலால் ஆங்கங்கே கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் தமிழில் தொகுத்து தந்துள்ளேன் .. முதல் முயற்சி பிழை இருப்பின் பொறுத்தருள்க .


தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது

மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்
1 சங்க கால சோழர்கள்
2 விஜயால சோழர்கள்
3 சாளுக்கிய சோழர்கள்
நாம் இங்கு காண இருப்பது விஜயால சோழர்களை பற்றி.. இவர்கள் காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் தன் கடற்படை வலிமை கொண்டு தெற்காசியா முழுவது பறந்து விரிந்திருந்தது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக கடல் கடந்து தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு ராஜ்யம் சோழ ராஜ்யம் தன்.இவர்கள் தம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து மதத்தையும்,திராவிட கலாச்சாரத்தையும் பரப்பினர்.
விசயாலய சோழன்
விசயாலய சோழன் (கி.பி. 850-880) என்ற மாவீரன் காலத்திலிருந்து சோழர் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. விசயாலய சோழன் கி.பி 850இல் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான்.விசயாலயசோழன் காலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும் வலிமை பெற்று இருந்தனர்.இதே கால கட்டத்தில் சோழர்களைப்போன்றே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம்வசப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்டமுடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது.
திருப்புறம்பயம் போர்
சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர்.அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான்.அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்டதோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார்.இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது.கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில்வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.
முதலாம் ஆதித்தன்
மாவீரன் விசயாலய சோழன், சோழர்குலம் மீண்டும் சோழநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கு அடிக்கல் நாட்டினான்.விஜயால சோழன் பல்லவர்களை வெற்றி கொண்டு தஞ்சையை தலைமையிடமாக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தைய் நிறுவினான் .விஜயால சோழனுக்கு பின் அவனது மகனான ஆதித்ய சோழன் ஆட்சிக்கு வந்தான்.பிறகு ஒரு போரில் ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் அபராஜிதன் மீது முதலாம் ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்று தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான். இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும்.
முதலாம் பராந்தகன்
ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகன் ஆட்சி ஏற்றவுடன் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் இராசசிம்மன் உடன் போரிட்டான்.இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான்.போரில் பாண்டியர்களை வென்று தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்
தக்கோலப் போர்
முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்ததால் இராஷ்டிரகூடர்களின் வளர்ச்சி அதிகமாயிற்று.திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான். அப்போது இராட்டிரக்கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.அரக்கோணத்திற்கு அருகில் உள்ளல் தக்கோலம் என்ற இடத்தில் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னர தேவனுக்கும் இராசாதித்தனுக்கும் கடும்போர் நடந்தது. மூன்றாம் கிருஷ்ணனுக்கு துணையாக கங்க மன்னன் பூதுகன் என்பன் போரிட்டான். இராசாதித்த சோழன் யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பூதுகன் விடுத்த அம்பு ஒன்று சோழனின் மார்பை துளைத்துச் சென்றது. இராசாதித்தன் வீர மரணம் அடைந்தான். இதனால் சோழ படை தோல்வியுற்று தனது பகுதிகளை இழந்தது. ஏழத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழ் தக்கோலம் இருந்தது.வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான்
கண்டராதித்த சோழன்
தக்கோலப்போரில் இராசாதித்த சோழன் மாண்டதால் முதலாம் பராந்தகன் தனது இரண்டாவது புதல்வனான கண்டராதித்தனை முடி சூடச் செய்தார் . கண்டராதித்தன் தான் பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலயே அரிஞ்சய சோழனை இளவரச பட்டமேற்கச் செய்தான்.அப்பொழுது கண்டரதித்தனுக்கு புதல்வர்கள் கிடையாது.கண்டராதித்தான் போர்களில் ஈடுபடுவதை காட்டிலும் கோவில் கட்டுவதிலயே அதிகம் ஈடுபாடு கொண்டார்.தொண்டை மண்டலம் தொடர்ந்து இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழே இருந்தது.அதை மீட்பதற்கு சிறிது கூட முயலவில்லை என்றே கூற வேண்டும்.இக்காலகட்டத்தில் சோழ இராணுவம் வலிமை குறைந்து, கடல் வாணிபம் செழிப்புற்று விளங்கியது. சிதம்பரம் கோவிலில் உள்ள திருவிசைப்பா என்ற சைவ பாடலை பாடியவர் இவர்தான் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது.
அரிஞ்சய சோழன்
அரிஞ்சய சோழன் முதலாம் இராசாதித்த சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும்,தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன்,மிகக் குறுகிய காலமே ஆண்ட இவன் சோழ நாட்டின் வடக்குப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியில் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.
சுந்தர சோழன்
அரிஞ்சய சோழன் இறந்தவுடன் அவனது மகனான சுந்தர சோழன் பட்டமேற்றான். கண்டராதித்தன் மகனாகிய உத்தம சோழன் பட்டத்துக்கு உரிமை பெற்றவனாயினும் அவனது இளம் பிராயத்தை கருதி தனது மூத்த பேரனை சுந்தர சோழனை பட்டமேற்கச் செய்தான் முதலாம பராந்தகன் என்று கருத்து உண்டு.இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்ட சுந்தர சோழனக்கு ஆதித்ய கரிகாலன்,அருண் மொழி தேவன் , குந்தவை என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர் . இவன் ஆட்சிக்கு வந்த பொழுது தெற்கே பாண்டியர்களும் வடக்கில் இராஷ்டிரகூடர்களிடம் மிக வலுவாக இருந்தனர்.இவன் முதலில் உள்நாட்டு கலகக்காரர்களை அடக்கியத்துடன் பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை மன்னன் மகிந்தனை அடக்க கொடும்பாளூர் வேளாள இளையவர் தலைமையில் ஒரு படையை இலங்கைக்கு அனுப்பினான் . குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட படையாலும், ஆயுத மற்றும் தானிய குறைபாடு காரணமாகவும் சோழ படைகளால் இலங்கை படையை வெல்ல முடியவில்லை .இப்போரில் கொடும்பாளூர் வேளாள இளையவர்போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார்.
சோழப் படைகள் இலங்கையில் தோல்வியுற்றவுடன் வீர பாண்டியன் மீண்டும்மறைந்து இருந்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தான்.ஆனால் இம்முறை சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் படை நடத்தி சென்றான். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனும் வீர பாண்டியனும் நேருக்கு நேர் மோதினர்.இப்போரில் சுந்தர சோழன் யானைகளை கொன்று இரத்த ஆறை ஓட வைத்தான் என்றும், போரின் இறுதியில் வீர பாண்டியன் படைகள் தோல்வியுற்று வீர பாண்டியன் பக்கத்தில் உள்ள மலையில் சென்று ஓளிந்து கொண்டதாகவும் அவனை ஆதித்யன் தேடி சென்று தலையைக் கொய்ததாகவும் கருத்து உண்டு. அல்லது இவன் போர்க்களத்தில் கொல்லப்பட்டு இருக்கலாம் எப்படியும் "ஆதித்யன் வீரத்துடன் போரிட்டு ,வீர பாண்டியனை வென்று அவனுடைய தலையைக் கொய்ததாக" திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. இப்போரில் வென்றாலும் சுந்தர சோழனால் முழுமையாக பாண்டிய நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிய வில்லை.
இப்போர் முடிந்தவுடன் ஆதித்யன் வடக்கில் ஆக்கிரமித்து கொண்டிருந்த இராஷ்டிரகூடர்களிட போரில் ஈடுபட்டான் . இப்போரில் இவர்களால் இராஷ்டிரகூடர்களை முழுமையாக வடக்கிலிருந்து விரட்ட முடிந்தது.இலங்கை போரில் ஏற்ப்பட்ட தோல்வியை துடைக்க மீண்டும் இலங்கை மீது படை எடுக்க சுந்தர சோழன் தீர்மானித்தான்.ஆனால் இம்முறை யார் தலைமையில் படை நடத்தி செல்வது என்ற விவாதம் ஏற்ப்பட்டது.அப்போதுஆதித்ய கரிகாலன் இராஷ்டிரகூடர்களுடன் காஞ்சியை நிலைப்படுத்த தீவிரமான போரில் ஈடுப்பட்டிருந்தான்.இந்நிலையில் சுந்தர சோழனின் இளைய மகனான அருண் மொழி தேவன் (ராஜ ராஜான்) படைகளை நடத்த முன் வந்தான்.அப்போது அவனுக்கு வயது 19.
ஆதித்த கரிகாலன் கொலை
சுந்தர சோழன் தமது காலத்தில் உரிய பிராயத்தை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வர் மதுராந்தகரை அடுத்த இளவரசராக அறிவிக்காமல் தனது தலைமகனான இரண்டாம் ஆதித்தரை இளவரசராகப் பட்டம் கட்டியது பல்வேறு மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குமென்று தோன்றுகிறது. இதில் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்பையடைந்த உடையார்குடியின் கேரளத்து அந்தணர்கள் இரண்டாம் ஆதித்தரைக் கொலை செய்துவிட்டு மதுராந்தகர் உத்தமச் சோழர் என்கிற பெயரில் சோழசிம்மாதனமேற வழியேற்படுத்திக்கொடுத்தார்கள். இரண்டாம் ஆதித்தரின் தமையனான இளைஞர் அருள்மொழிவர்மர் தனது சிற்றப்பா மதுராந்தகர் சோழ மகுடத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனைத் தனது மனதினாலும் தீண்டுவதில்லையென்று திட்டவட்டமாக அறிவித்ததைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளன .உத்தம சோழன் பதவி ஏற்றவுடன் அருண்மொழிவர்மனை இளவரசு பட்டமேற்கச் செய்தான் .
உத்தமச் சோழரின் காலத்தில் வம்ச வம்சமாகச் சோழருடன் பகை பூண்டிருந்த பாண்டியருடன் உத்தமச் சோழரும் அவரது சுற்றமும் நெருக்கமாக கைகோர்த்துக்கொண்டார்கள் என்பது குத்தாலக் கல்வெட்டால் விளங்குகிறது. சோழசாம்ராஜ்ஜியத்தை மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாச்ரயர் கி பி 980ல் தாக்கியபோது உத்தமச் சோழரால் அவரை வெற்றிகொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபின் வேறு வழியின்றி உத்தமச் சோழர் விலகிக் கொள்ள கிபி 985ல் "இராஜராஜன்" என்னும் அபிஷேக நாமத்துடன் அருள்மொழிவர்மர் சோழசிங்கதானத்தில் அமர வழியேற்பட்டது.

போர்கள்
காந்தளூர்ச்சாலை கடிகை போர்
பட்டமேற்றவுடன் ராஜ ராஜன் செய்த முதல்காரியம் தனது தமையனார் ஆதித்த கரிகாலர் கொலையில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டித்ததே ஆகும். சோமன் இவனது தம்பி ரவிதாசன், பரமேஸ்வரன், மலையுரன் மற்றும் இவர்களுக்கு பெண் கொடுதோர் பெண் எடுத்தோர் ஆகியோரை கட்டிய துணியோடு சோழ எல்லை தாண்டி சேர நாட்டுக்கு துரத்தி அடித்தான்.அந்தணர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை தரக் கூடாது என்று போதிக்கும் மனு தர்மத்துக்கு அடிபணிந்து அவர்களை உயிரோடு விட்டதாக கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை மீது போர் தொடுத்து பாஸ்கர ரவி வர்மனை தோற்கடித்தான்.காந்தளூர்சாலை கடிகை என்பது சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடையே புகழ்வாய்ந்த போர்முறைகளை, ஆயுதங்கள் பயிற்சியினை மற்றும் இன்னபிற தந்திரங்களை பயிற்றுவிக்கும் கல்லூரி போல திகழ்ந்து வந்தது.இங்கு தான் ஆதித்த கரிகாலனை கொல்ல சதி திட்டம் உருவானதாக கருதியதால் இக்கடிகை தகர்க்கப்பட்டது.
மலை நட்டு போர்
இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான்.இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.
ஈழப் போர்
பாண்டிய மணிமுடியை கைப்பற்றும் பொருட்டும் இலங்கையை முழுவதுமாக தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டும் ஈழப் போரை நடத்தினான். சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.இருப்பினும் இவனால் பாண்டிய மணிமுடியை கைப்பற்ற முடியவில்லை.இராஜேந்திர சோழன் காலத்திலயே மணிமுடியும் இலங்கையின் முழு கட்டுப்படும் சோழர் கைக்கு வந்தது.
வடக்கு போர்கள்
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஷ்டிரகூடரின் இல்லாததால் இப்போர் மிக சுலபமாக வெற்றி அடைந்தது . அடுத்த நூற்றாண்டு முழுதும் இந்த பகுதி சோழர் வசமே இருந்தது.
மேலைச் சாளுக்கிய போர்
காங்கபடியையும் நுலம்பாடியையும் கைப்பற்றியவுடன் சோழர்களுக்கும் சாளுக்கியகளுக்கும் அடிக்கடி சிறு சிறு மோதல் ஏற்பட்டது . இருவரும் தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர் தங்களது பலத்தை நிருபிப்பதற்கு.எந்த சம்பவம் படையெடுப்பை தூண்டியது என்பது தெளிவாக தெரியவில்லை .கல்வெட்டுபடி கி.பி 1007 ல் இராஜராஜன் தலைமையில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் கொண்ட சோழ படை சாளுக்கியத்தை துவசம் செய்ததுடன் மிகப்பெரும் அழிவையும் ஏற்படுத்தி சென்றது.இப்போரில் சத்தியாசிரயனை வெற்றி கொண்டு அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் கொணர்ந்து பெரிய கோவில் கட்டுவதற்கு செலவழித்தான் இராஜராஜன்.
வேங்கிப் போர்
இராஜராஜன் கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஓர் இராணுவ உடன்படிக்கை செய்துகொண்டான். ஆனால் இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்த்த ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.
கலிங்க போர்
வேங்கிப் போர் முடிந்தவுடன் கலிங்கத்தின் (கலிங்கம் இன்றைய ஒரிசாவின் பகுதி) மீது படையெடுத்தான்.இராஜராஜன் தலைமையில் சென்ற படை கலிங்க அரசன் பீமனை முறியடித்து
மாலத்தீவு போர்
இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
சோழ சாம்ராஜ்யம்
மதுரை
கங்கபாடி நுளம்பபாடி (தற்போதய மைசூர்)
கலிங்கா
வெங்கி
மாலத்தீவு
கடாரம் (தற்போதிய மலேசியாவில் உள்ள ஒரு தீவு )
மலாயா ( தற்போதிய தாய்லாந்து, பிலிபீன்ஸ், இந்தோனேசிய, மலேசியா, ப்ருனாய் மற்றும் சிங்கபூர் )
இலங்கை

தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால் கட்டப்பட்ட பழங்கால இந்து ஆலயம்
நிர்வாகம்
இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின.
இவன் வலிமை மிக்க
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது
தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்
நிலசீர்திருத்தம்
ராஜராஜன் தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடுவது என்பது ஓர் அசுர சாதனை. அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும். இதனால் இவருக்கு “குரவன் உலகளந்தான்” என்றும் ஒரு பெயர் வந்தது.
சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது.10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்..
கிராமசபை
இராஜராஜனுடைய சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலிஎனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம்பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில்தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டுஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில்உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல்என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும்ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள்,ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன்வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள்என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம்என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

ராஜராஜனின் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர்.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.


சமயம்

ராஜராஜனின் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தஞ்சை கோவில்
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது
.














தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது

தெனிந்திய அரசுகள் மற்றும் ராஜ ராஜ சோழனை பற்றிய ஒரு நிழற்படம்




கல்கியின் பொன்னியின் செல்வனின் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள குந்தவை மற்றும் நந்தினி படங்கள்.














கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )
சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்